“வீட்டு வாசலில் தூங்கிய மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை” - காம இச்சையுடன் சுற்றி திரிந்த குற்றவாளி.. 5 நாட்கள் நடந்த போராட்டம்!

அணிந்திருந்த சேலை கலைந்த நிலையிலும், தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில்...
accust and old lay
accust and old lay
Published on
Updated on
2 min read

தூத்துக்குடி மாவட்டம், இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி (56). இவரது கணவர் காளிமுத்து, திருமணமான ஓராண்டிலேயே பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. அதன் பிறகு மகள் சத்யாவை தனியாக வளர்த்த முத்துலட்சுமி, பழைய பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். மகளுக்கு திருமணம் ஆன பிறகு, இந்திரா நகரில் உள்ள அவரது வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த (ஜூலை 15) ஆம் தேதி சத்யா வெளியூருக்கு சென்றிருந்ததால், முத்துலட்சுமி வீட்டின் முன்புற திண்ணையில் படுத்து தூங்கியுள்ளார். மறுநாள் அதிகாலை அப்பகுதி மக்கள் வெளியே வந்தபோது, அவரது உடையில் அணிந்திருந்த சேலை கலைந்த நிலையிலும், தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. வெளியூரிலிருந்து திரும்பிய மகள் சத்யா, தனது தாய் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றம்சாட்டிய நிலையில், சிகிச்சை பெற்று வந்த முத்துலட்சுமி கடந்த ஜூலை 18-ஆம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, முத்துலட்சுமியின் மகள் சத்யா மற்றும் உறவினர்கள், தென்பாகம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது சாதாரண மரணம் அல்ல, திட்டமிட்ட கொலை என்றும், தலையில் இருந்த பலத்த காயங்களை கருத்தில் கொண்டு வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும், குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் முத்துலட்சுமியின் மண்டையில் மூன்று ஆழமான வெட்டுக்காயங்கள் இருந்தது உறுதியானது. இதையடுத்து வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவின் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, உதவி ஆய்வாளர்கள் முகிலரசன் மற்றும் சுப்புராஜ் தலைமையில் மூன்று தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணையை தொடங்கினர்.

சம்பவம் நடைபெற்ற பகுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியைச் சேர்ந்த ரீகன் (37) என்பவரை அடையாளம் கண்டனர். அவர் மீது ஏற்கனவே பல திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று ரீகன் மதுபோதையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை அருகே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி, நகரின் பல பகுதிகளில் சுற்றித்திரிந்துள்ளார். நீண்ட காலமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த அவர், பெண்களை பின்தொடர்ந்து பாலியல் நோக்கத்துடன் அலைந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதிகாலை நேரத்தில் வீட்டின் வாசலில் தனியாக படுத்திருந்த முத்துலட்சுமியை பார்த்த ரீகன், அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் சம்பவத்தை வெளியில் கூறிவிடுவார் என்ற அச்சத்தில் அவரது தலையில் கொடூரமாக தாக்கி அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் பதுங்கியிருந்த ரீகனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். குற்றவாளி கைது செய்யப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஐந்து நாட்களாக உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மகள் சத்யா, தனது தாயின் உடலை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்தார்.

வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, பின்னர் கொலை செய்த இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட ரீகனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார், இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பதையும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com