கரூர் மாவட்டம் குளித்தலை பெரிய பாலம் அருகே மலையப்பன் நகர் காலனி பகுதியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க திருமணமான பெண் ஒருவர் குளித்தலை பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் மெடிக்கல் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடையில் வேலை பார்க்கும் போது கடைக்கு எதிரே மற்றொரு கடையில் குளித்தலை அருகே வரகூர் பகுதியைச் சேர்ந்த தவெக-வை சேர்ந்த கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் என்பவர் நின்று கொண்டு அந்த பெண்ணுக்கு பாலியல் ரீதியாக சைகை காட்டியுள்ளார். மேலும், அந்த பெண் வீட்டிற்கு செல்லும்போது அவரை பின் தொடர்ந்து பாலியல் ரீதியாக பேசியும், சைகை மூலமும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இது குறித்து தனது வீட்டாரிடம் தெரிவித்துள்ளார். இதனால், அப்பெண்ணை கடந்த இரண்டு மாதங்களாக அவரது கணவர் வேலைக்கு அழைத்துச் செல்வதும் மீண்டும் வேலை முடிந்து வீட்டிற்கு அழைத்துக் கொண்டு சென்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவரது கணவர் இல்லாமல் அவரது தங்கை அவரை அழைத்துச் செல்ல வந்துள்ளார். வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்களை நடு வீதியில் வழிமறித்த ரமேஷ் தவறாக நடக்கும் முயன்றுள்ளார். உடனடியாக இதுகுறித்து பெண்ணின் உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அங்கு வந்த அப்பெண்ணின் உறவினர்கள் ரமேஷை சரமாரியாக தாக்கி உள்ளனர். பின்னர் குளித்தலை காவல் நிலையத்தில் ஒப்படைத்த உறவினர்கள் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற தவெக நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்ய சொல்லி காவல்துறையினரிடன் கூறியுள்ளனர்.
ஆனால், அப்போது அங்கு பணியில் இருந்த காவல்துறையினர் புகாரை ஏற்க மறுத்து "அவரை தாக்கியதற்காக உங்கள் மீதுதான் முதலில் வழக்கு பதிவு செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளனர். இதனை அடுத்து அப்பெண்ணின் உறவினர்கள் வழக்கறிஞர் மூலம் புகார் கொடுத்துள்ளனர். அதன் பின்னரே தவெக நிர்வாகி மீதான புகாரை வாங்கிக்கொண்டு CSR மட்டுமே பதிவு செய்ய முடியும் என்றும், வழக்கை விசாரித்த பின்பு தான் குற்ற வழக்காக பதிவு செய்ய முடியும் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும், "பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுதான் தவெக அரசின் கடமை" என்று பல மேடைகளில் கூறிவரும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கட்சியின் நிர்வாகி ஒருவர் பெண்ணிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்ட சம்பவம் தற்போது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பெண்ணிற்கு பாலியல் ரீதியான தொல்லைகளை தடுக்க உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை எங்கே? குளித்தலை பகுதிகளில் பாலியல் தொல்லைகளை தடுக்க முயலாமல் சிங்கப்பெண் அதிரடிப்படை எங்கே போனது? எனவும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்