“அவனை காதலிச்சிட்டு இங்க எதுக்கு வந்த?” - குழந்தையுடன் வந்த பெண் மீது துப்பாக்கி நீட்டிய மாமா.. மலை கிராமத்தில் நடந்த அதிர்ச்சி!

குழந்தை பிறந்த காரணத்தால் மனம்மாறிய அஞ்சலியின் தாய் சித்ரா மகள் மற்றும் பேரக் குழந்தையை...
“அவனை காதலிச்சிட்டு இங்க எதுக்கு வந்த?” - குழந்தையுடன் வந்த பெண் மீது துப்பாக்கி நீட்டிய மாமா.. மலை கிராமத்தில் நடந்த அதிர்ச்சி!
Published on
Updated on
2 min read

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை பாடநூர் அருகே கீழ்காடு மாஞ்சான்வட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் தேவேந்திரன்,சித்ரா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள் உள்ள நிலையில் மூத்த மகளான 23 வயதுடைய அஞ்சலி என்பவர் சேலத்தில் கல்லூரி படிப்பு படித்து வந்துள்ளார். அப்போது அதே கல்லூரியில் படித்து வந்த தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த கேசவன் என்பவருக்கும் அஞ்சலிக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது நட்பானது நாளடைவில் காதலாக மாறி காதலித்து வந்திருக்கின்றனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டாரும் இவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவிக்காத நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இருவரும் யாருக்கும் தெரியாமல் வீட்டைவிட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அதே பகுதியில் தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்த நிலையில் தற்போது அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் குழந்தை பிறந்த காரணத்தால் மனம்மாறிய அஞ்சலியின் தாய் சித்ரா மகள் மற்றும் பேரக் குழந்தையை ஏலகிரி மலை கீழ்காடு மாஞ்சான்வட்டம் பகுதியில் உள்ள அவரத வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

krishnan and gun
krishnan and gun

அதனை பார்த்த சித்ராவின் அண்ணனான கிருஷ்ணன் என்பவர் எங்களுக்கு தெரியாமல் எங்களை கேட்காமல் எதற்காக உன் மகளை அழைத்து வந்தாய் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு அஞ்சலியை அடித்ததாக சொல்லப்படுகிறது. மேலும் “காதல் கல்யாணம் பண்ணவங்களுக்கு இங்க இடமில்லை” என கூறவே இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த அஞ்சலியின் மாமா கிருஷ்ணன் வீட்டில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்து அஞ்சலியை சுட முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்து அச்சமடைந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அவரிடம் இருந்த துப்பாக்கியை பறித்து சமாதனம் செய்து வைத்திருக்கின்றனர்.

பின்னர் இது தொடர்பாக அஞ்சலி ஏலகிரி மலை போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் போலீசார் வருவதை அறிந்த கிருஷ்ணன் துப்பாக்கியை மறைப்பதற்காக அதனை உடைத்து காட்டில் போட்டு உள்ளார். அதன் பிறகு விரைந்து வந்த ஏலகிரிமலை காவல்நிலைய காவல் ஆய்வாளர் பாரதி, கிருஷ்ணனை காவல் நிலையம் அழைத்து சென்று அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உடைத்து போடப்பட்ட துப்பாக்கியை கைப்பற்றி காவல் நிலையம் எடுத்து வந்தனர். காதலை திருமணம் செய்து கொண்ட தங்கை மகளை தாய்மாமன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com