“3வது மனைவியை கொலை செய்து.. விபத்து என நாடகமாடிய கணவன்” - 44 லட்சம் இன்சூரன்ஸ் பணத்திற்காக போடப்பட்ட 'கேங் ஸ்கெட்ச்' அம்பலம்!

அமருக்கு 15 லட்சம் ரூபாய் வழங்கவும், மீதமுள்ள தொகையை மற்ற கூட்டாளிகளுக்குப் பிரித்துக் கொடுக்கவும்
Up man kills his wife for 44 for 44 lakh insurance money
Published on
Updated on
2 min read

உத்தரப் பிரதேசத்தின் ஹமீர்பூரில் சாலையோரத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண், முதலில் சாலை விபத்தில் பலியாகியிருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால், 48 மணி நேரத்திற்குள் இந்த வழக்கில் திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன. அதன்மூலம், அவரது கணவர் 44 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காப்பீட்டுத் தொகைக்காக தீட்டிய கொலைச் சதித்திட்டம் அம்பலமானது.

உத்தரப் பிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டத்தில், ஜூலை 29ஆம் தேதி இரவு வயலுக்குச் சென்றுவிட்டு திரும்பிய விவசாயிகள், சாலையோரத்தில் ஒரு பெண்ணின் சடலத்தைக் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆதாரங்களைச் சேகரித்து, உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். ஆரம்பத்தில் இது சாலை விபத்தில் நிகழ்ந்த மரணமாக இருக்கலாம் என சந்தேகித்தனர். ஆனால், அந்தப் பெண் யார் என்பது காவல்துறைக்கு உடனடியாகத் தெரியவில்லை. விசாரணையின்போது மீட்கப்பட்ட வங்கிக் கணக்குச் சீட்டு முக்கியத் துப்பாக அமைந்தது. அதன் மூலம், அந்தப் பெண் 32 வயதான ரீட்டா என்பது காவல்துறைக்கு தெரியவந்தது.

ரீட்டாவின் தந்தை சர்வேஷ் குமார் குப்தா, "இது விபத்து அல்ல; என் மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது" என்று புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில், போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து, ரீட்டா எவ்வாறு சாலையோரத்தில் சடலமாகக் கிடந்தார் என்பது குறித்து தீவிர விசாரணையைத் தொடங்கினர். இதற்கிடையில், ரீட்டாவின் கணவர் அமர், தனது மனைவியைக் காணவில்லை என்று சுமேர்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர், அடையாளம் காணப்படாத சடலத்தை அடையாளம் காணவும் அவர் வந்துள்ளார். தன் மனைவியின் மரணத்தில் தன் மீது சந்தேகம் வராத வகையில் போலீசாரைத் திசைதிருப்பவும், மனைவிக்கு என்ன நடந்தது என்பது தனக்குத் தெரியாது என்ற தோற்றத்தை உருவாக்கவும் இந்த இரண்டு நடவடிக்கைகளையும் அமர் மேற்கொண்டதாக காவல்துறையினர் பின்னர் சந்தேகித்தனர். இருப்பினும், சம்பவ இடத்தில் கிடைத்த ஆதாரங்களை ஆய்வு செய்த புலனாய்வாளர்கள், வழக்கின் திசையை மாற்றினர். அதன்பிறகே இது திட்டமிட்ட கொலை என்பது உறுதியானதாக காவல்துறை தெரிவித்தது.

காவல்துறையின் விசாரணை, ரீட்டாவின் திருமண வாழ்க்கை மற்றும் தம்பதியரின் நிதி நிலைமைகள் மீது திரும்பியது. ரீட்டா சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு அமரைத் திருமணம் செய்துகொண்டிருந்தார். அவரது குடும்பத்தினரின் கூற்றுப்படி, இது ரீட்டாவின் இரண்டாவது திருமணம். அதேவேளையில், அமருக்கும் ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடைபெற்றிருந்ததாகவும், இது அவரது மூன்றாவது திருமணம் என்பதும் தெரியவந்தது. முதல் கணவர் இறந்த பிறகு, ரீட்டா கான்பூரில் வேலைக்குச் சென்றுள்ளார். அங்கு அமரைச் சந்தித்த அவர், பின்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டதாகத் தெரியவந்துள்ளது.

காவல்துறையின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்களுக்கு கணிசமான அளவில் கடன் இருந்தது தெரியவந்தது. இதனால், ரீட்டாவின் பெயரில் காப்பீட்டுத் திட்டம் ஒன்றை எடுத்து, அவரைக் கொலை செய்து, அவரது மரணத்தை சாலை விபத்து போல் சித்தரித்து, 44 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகையைப் பெற சதித்திட்டம் தீட்டியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், இது கூட்டு சதித்திட்டமாக திட்டமிடப்பட்டதாகவும், காப்பீட்டுத் தொகையை எவ்வாறு பங்கிட்டுக் கொள்வது என்பதையும் அவர்கள் முன்கூட்டியே முடிவு செய்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அதன்படி, அமருக்கு 15 லட்சம் ரூபாய் வழங்கவும், மீதமுள்ள தொகையை மற்ற கூட்டாளிகளுக்குப் பிரித்துக் கொடுக்கவும் திட்டமிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அமர் ரீட்டாவை பௌதியா அருகே உள்ள பிரதான சாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரது கூட்டாளிகள் காருடன் காத்திருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. முதலில் காரால் ரீட்டாவை மோதியதால், அவர் சாலையோர பள்ளத்தில் விழுந்ததாகவும், பின்னர் அவரை வெளியே இழுத்து சாலையில் கிடத்தி, மீண்டும் கார் ஏற்றி கொலை செய்ததாகவும் புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதன்பிறகு, இந்தக் கொலையை சாலை விபத்து போல காட்டும் நோக்கில் சடலத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றதாகவும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதன் பின்னர், அமர் தனது மனைவி காணவில்லை என்று புகார் அளித்து, பின்னர் அவரது உடலை அடையாளம் காட்டினார். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சந்தேகத்தைத் திசைதிருப்பும் முயற்சியாகவே இருந்ததாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், 48 மணி நேரத்திற்குள் விசாரணை அமர் மற்றும் அவரது கூட்டாளிகள் பக்கம் திரும்பியது. சம்பவ இடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள், தொழில்நுட்பப் பகுப்பாய்வு, கண்காணிப்புக் காட்சிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை ஆகியவற்றின் அடிப்படையில், இது விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என்பது உறுதியானது.

இதையடுத்து, அமர் மற்றும் அமித் குப்தா (ராம்), புஷ்பேந்திர சோனி (சாஹில்), அபய் சிங் (கோலு) ஆகிய மேலும் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் காரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. 44 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகைக்காக தனது காதல் மனைவியையே கொலை செய்து, அதை சாலை விபத்து போல சித்தரிக்க முயன்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com