உத்தரப் பிரதேச மாநிலம் உன்னா பகுதியில், தனது கணவரை கொலை செய்து, சடலத்தை ஒரு பெட்டிக்குள் அடைத்து நெடுஞ்சாலையோரத்தில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை வழக்கில், கணவரைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட அவரது மனைவி நேஹா, பக்கத்து வீட்டுக்காரர் ராகுல் உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறையினர் 12 மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகள் மற்றும் வாகனத்தின் பதிவு போன்றவற்றை விசாரித்து, 12 மணி நேரத்திற்குள் குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் கண்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் அச்சல்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் சோனு, இவர் உன்னாவ் - ரேபரேலி நெடுஞ்சாலையோரத்தில் ஒரு பெட்டிக்குள் அடைக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் தனது மனைவி நேஹாவுடன் கங்காகாட் கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கஞ்சன் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது, அந்த பெட்டியைக் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனத்தைக் கண்டறிந்தனர். அந்த வாகனம் பெட்டியுடன் சென்றுவிட்டு, பெட்டியின்றித் திரும்பியது விசாரணையில் தெரியவந்தது.
அதையடுத்து வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து அதன் உரிமையாளர் மற்றும் ஓட்டுநரை கண்டுபிடித்தது காவல்துறை. அதன் மூலம் சந்தேக நபர்களை அடையாளம் கண்டனர். இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட சோனுவின் மனைவி நேஹா, அவரது பக்கத்து வீட்டுக்காரர் ராகுல் மற்றும் தௌஃபிக் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் சிறுவர் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறையினரின் விசாரணையின்போது, சோனு அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியை தாக்கியதாகவும், பல பெண்களையும் வீட்டிற்கு அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மனைவி நேஹா கடந்த அக்டோபர் 19-ம் தேதி சோனு தன்னைத் தாக்கியதாகக் காவல்துறையில் புகார் அளித்ததாகவும், அப்போது காவல்துறையினர் சோனுவை எச்சரித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, சோனு தனது பக்கத்து வீட்டுக்காரரான ராகுலுடன் மது அருந்தியதாகவும், பின்னர் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாகவும் நேஹா தெரிவித்துள்ளார். அப்போது சோனு கீழே விழுந்ததில் அவரது தலை மற்றும் மூக்கில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து, ராகுல் சோனுவின் கழுத்தை நெரித்துக் கொன்றதாக நேஹா வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர் சடலத்தை மறைப்பதற்காக ஒரு இரும்பு பெட்டியை ஏற்பாடு செய்து, அதைக் கொண்டு செல்ல ஒரு வாகனத்தையும் உதவிக்கு ஒரு நபரையும் ஏற்பாடு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
பெட்டியைக் கொண்டு செல்லும்போது கூடுதல் பணம் கேட்டதாகவும், அதற்கு மறுப்புத் தெரிவித்ததால் அவர்கள் பெட்டியை நெடுஞ்சாலையோரத்தில் விட்டுவிட்டுச் சென்றதாகவும் நேஹா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கொலையில் தனக்குத் தொடர்பு இல்லை என்று ராகுல் மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அக்டோபர் 19-ம் தேதி கான்பூரிலிருந்து திரும்பியதாகவும், கார்டன் கேடா பகுதியில் உள்ள புதிய வீட்டிற்குப் பொருட்களைக் கொண்டு செல்ல சுமை ஏற்றும் வாகனத்தையும் தொழிலாளர்களையும் ஏற்பாடு செய்து தருமாறு நேஹா கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாகனம் மற்றும் தொழிலாளர்களை ஏற்பாடு செய்தது மட்டுமே தனது பணி என்றும், தான் உதவி செய்வதற்கு முன்பே நேஹா சோனுவைக் கொலை செய்துவிட்டதாகவும் ராகுல் கூறியுள்ளார். இதனால், கொலையில் ஒவ்வொருவருக்கும் என்ன பங்கு உள்ளது என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
காவல்துறையின் தகவலின்படி, நேஹா சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு லக்னோவின் மாலிஹாபாத் பகுதியைச் சேர்ந்த ஜகதீஷ் என்பவரைத் திருமணம் செய்துள்ளார். இந்தத் திருமணத்தின் மூலம் அவருக்கு நான்கு மகள்கள் உள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளாக சோனுவுடன் மனைவியாக வாழ்ந்து வந்ததாகக் கூறப்படும் நேஹாவுக்கு, அவருடன் ஐந்து வயதில் ஒரு மகனும் உள்ளார்.
ராகுலின் மனைவி குஷ்பூ அளித்த தகவலின்படி, நேஹாவும் சோனுவும் சுமார் ஒரு மாதத்திற்கு முன்புதான் கஞ்சன் நகரில் உள்ள வாடகை வீட்டிற்குக் குடிபெயர்ந்துள்ளனர். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், வீட்டின் உரிமையாளர் வீட்டைக் காலி செய்யுமாறு கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் ஐந்து காவல் குழுக்கள் விசாரணையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. சிசிடிவி காட்சிகள் மற்றும் வாகனப் பதிவு எண் ஆகியவை விசாரணையில் முக்கியத் தடயங்களாக அமைந்துள்ளன. கொலைக்கான உண்மையான காரணம் மற்றும் கைது செய்யப்பட்டவர்களின் தனித்தனியான பங்கு குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.