“என் வண்டி எனக்கு வேணும்..” - டாஸ்மாக் கடையில் அண்ணன் தம்பிக்கு ஏற்பட்ட தகராறு.. கஞ்சா போதையில் வாலிபர் வெறிச்செயல்!

இருப்பினும் ஐயப்பன் வண்டியை மீட்டு தருவதில் தாமதம் செய்து வந்திருக்கிறார்...
Vellore Gudiyatham Sathya Aiyappan Case
Vellore Gudiyatham Sathya Aiyappan Case
Published on: 
Updated on: 
1 min read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சேத்துவண்டை பகுதியைச் சேர்ந்தவர் 28 வயதுடைய சத்யா. இவரது சித்தப்பா மகன் கல்லூரைச் சேர்ந்த 23 வயதுடைய ஐயப்பன். இருவரும் சகோதரர்கள் என்பதால் ஒன்றாக சுற்றி வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் இருவரும் மாறி மாறி ஒருவருக்கொருவர் பண உதவிகளையும் செய்து வந்திருக்கின்றனர். இந்நிலையில் சத்யாவின் வண்டியை ஐயப்பன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணத்தேவைக்காக அடமானம் வைத்ததாக சொல்லப்படுகிறது.

நீண்ட நாட்களாகியும் வண்டியை ஐயப்பன் மீட்டு தராததால், சத்யா அத்தியாவசிய தேவைகளுக்கு வண்டியில்லாமல் அவதிப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக சத்யா தனது பெற்றோரிடம் கூறி ஐயப்பனை விரைவில் வண்டியை மீட்டு தர கூறியுள்ளார். இருப்பினும் ஐயப்பன் வண்டியை மீட்டு தருவதில் தாமதம் செய்து வந்திருக்கிறார். இந்த நிலையில், சத்யா மற்றும் ஐயப்பன் ஆகிய இருவரும் கொண்டசமுத்திரம் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடை அருகே மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

Admin

அப்போது, இருசக்கர வாகனத்தை அடகு வைத்தது தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் வாய் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த சத்யா, “என் வண்டி எனக்கு வேணும்..” என கூறி மது பாட்டிலால் ஐயப்பனின் வயிற்றில் குத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதில் குடல் வெளியே வந்து படுகாயமடைந்த ஐயப்பன் உடனடியாக அங்கிருந்தவர்கள் உதவியுடன் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த குடியாத்தம் நகர காவல்துறையினர், ஐயப்பனை மது பாட்டிலால் குத்தியதாக கூறப்படும் அவரது சகோதரர் சத்யாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் சத்யா சம்பவத்தின் போது கஞ்சா போதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. மது போதையில் இருசக்கர வாகனத்தை அடகு வைத்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சகோதரர் முறை உறவினரை மது பாட்டிலால் குத்திய சம்பவம் குடியாத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com