“ஹனிடிராப் வலையில் சிக்கிய ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி?” - பெண்ணுடன் நெருக்கமாக வீடியோ கால்.. பகிரப்பட்டதா ரகசிய தகவல்?

ராணுவம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசியத் தகவல்களைச் சேகரித்து வெளிநபர்களுக்கு வழங்குகிறாரா..
Vellore Retired Army Officer Investigation
Vellore Retired Army Officer Investigation
Published on: 
Updated on: 
2 min read

வேலூர் மாவட்டத்தில், ராணுவம் தொடர்பான ரகசியத் தகவல்களைச் சேகரித்து வெளிநபர்களுக்கு வழங்கியதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியிடம் மத்திய உளவுத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் மூலம் அறிமுகமான பெண் ஒருவர், ஹனிடிராப் முறையில் அவரிடம் ராணுவத் தகவல்களைக் கேட்டுப் பெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், கீழ்வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் 52 வயதுடைய பாபு. இவர் இந்திய ராணுவத்தில் 28 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றவர். ராணுவத்தின் தளவாடங்கள் தொடர்பான பிரிவில் அதிகாரியாகப் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பாபு ராணுவம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசியத் தகவல்களைச் சேகரித்து வெளிநபர்களுக்கு வழங்குகிறாரா என்ற சந்தேகம் மத்திய உளவுத்துறையினருக்கு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, அவரைக் கண்காணித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையில் கிடைத்ததாகக் கூறப்படும் தகவலின்படி, சுமார் ஓராண்டுக்கு முன்பு ஓய்வு பெற்ற பாபுவுக்கு வாட்ஸ்அப் மூலம் ஒரு பெண் அறிமுகமாகியுள்ளார். தொடர்ந்து இருவரும் வாட்ஸ்அப் மற்றும் வீடியோ கால் வாயிலாகப் பேசி நெருக்கமாகப் பழகியதாகத் தெரிகிறது. அந்தப் பெண், தான் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ (DRDO) தொடர்பான திட்டத்தில் பணியாற்றி வருவதாக பாபுவிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ராணுவத் தளவாடங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான விரிவான தகவல்கள் தேவைப்படுவதாகவும் கேட்டதாகத் தெரிகிறது.

அந்தப் பெண் கேட்ட தகவல்களைப் பாபு அவரிடம் பகிர்ந்ததாகவும், தன்னுடன் பணியாற்றிய முன்னாள் சக ஊழியர்கள் மற்றும் தற்போது ராணுவத்தில் பணியாற்றுபவர்களிடம் விசாரித்து கூடுதல் தகவல்களைச் சேகரித்து அனுப்பியதாகவும் விசாரணை வட்டாரங்கள் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், ராணுவம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான முக்கியத் தகவல்கள் ஏதேனும் பகிரப்பட்டுள்ளனவா, அவை யாருக்குச் சென்றன என்பது குறித்து மத்திய உளவுத்துறையினர் விசாரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, கீழ்வல்லம் பகுதியில் உள்ள பாபுவின் வீட்டிற்குச் சென்ற அதிகாரிகள், அவரை வேலூர் தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அங்கு இரண்டு நாட்களாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பின்னர், பாபுவை உளவுத்துறை தொடர்பு அதிகாரிகளிடம் வேலூர் தாலுகா போலீசார் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ (NIA) விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், பாபு மீது சுமத்தப்பட்டுள்ள சந்தேகங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இந்தச் சம்பவம் வேலூர் காவல்துறை வட்டாரத்திலும் கீழ்வல்லம் பகுதி மக்களிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com