"லவ் பண்ணதுக்கு இப்படியா?" மகளை கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை” - நள்ளிரவில் துடிதுடித்து இறந்த 14 வயது சிறுமி!

ஜீவா என்பவருடன் விகாஷினிக்குப் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது...
Villupuram 14 Year Old Girl Murder
Villupuram 14 Year Old Girl Murder
Published on: 
Updated on: 
1 min read

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே காதலை கைவிட மறுத்த 14 வயது மகளை, தூங்கிக் கொண்டிருந்தபோது தந்தையே கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வானூர் அடுத்த வி.பரங்கனி கே.எஸ்.ஆர். நகரைச் சேர்ந்தவர் சிவசாத்திரி. டிப்பர் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி விமலா. இந்தத் தம்பதிக்கு 16 வயதில் சிவமகி மற்றும் 14 வயதுடைய விகாஷினி என இரண்டு மகள்கள் உள்ளனர்.

இதில், இளைய மகளான விகாஷினியை விமலா, ராணிப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்குள்ள பள்ளியில் படிக்க வைத்துள்ளார். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த ஜீவா என்பவருடன் விகாஷினிக்குப் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் பெற்றோருக்குத் தெரியவந்ததும், அவர்கள் விகாஷினியைக் கண்டித்துள்ளனர். இதையடுத்து, விமலா தனது மகளை ராணிப்பேட்டையிலிருந்து அழைத்து வந்து, சொந்த ஊரான வி.பரங்கனியில் கணவருடன் வசித்து வந்துள்ளார்.

இதற்கிடையே, கடந்த மூன்று மாதங்களாக வானூர் அடுத்த கரசானூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த விகாஷினி, மீண்டும் தனது காதலன் ஜீவாவுடன் செல்போனில் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த பெற்றோர் பலமுறை கண்டித்தும், அவர் தொடர்ந்து ஜீவாவுடன் பேசி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று(அக் 29) இரவு விமலா வேலூரில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது, விகாஷினி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். காதலைக் கைவிட மறுத்ததால் ஆத்திரமடைந்த தந்தை சிவசாத்திரி, தூங்கிக் கொண்டிருந்த மகளின் கழுத்தை நெரித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, தனது சகோதரர் சசிக்குமாரை செல்போனில் தொடர்புகொண்ட சிவசாத்திரி, மகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் வீட்டிற்கு விரைந்து வந்து, மயக்க நிலையில் இருந்த விகாஷினியை மீட்டு வானூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, மகளைக் கொலை செய்துவிட்டு வீட்டிலேயே இருந்த சிவசாத்திரியை வானூர் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலைக் கைவிட மறுத்த 14 வயது மகளைத் தந்தையே கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.