விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அடுத்த பொம்மையார்பாளையத்தில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து தங்கும் விடுதிக்குள் புகுந்து இளைஞரை கத்தியால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொம்மையார்பாளையம் சென்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பழனிவேல் என்பவரின் மகன் 25 வயதுடைய கோவிந்தராஜ் என்கிற அஜித். இவர் புதுச்சேரி-சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், பொம்மையார்பாளையம் பகுதியில் தங்கும் விடுதி நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் (ஆக -6) இரவு அஜித் தனது பிறந்தநாளை முன்னிட்டு, விடுதிக்கு அருகிலுள்ள வாலிபால் மைதானத்தில் நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியதாக கூறப்படுகிறது. அப்போது, பொம்மையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிலர் மது போதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு சண்டையிட்டதாக தெரிகிறது. இதனை பார்த்த அஜித், அவர்களை தடுத்து நிறுத்தி கண்டித்துள்ளார். மேலும், அவர்களில் ஒருவரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி விட்டு, அஜித் தனது தங்கும் விடுதிக்கு சென்று வழக்கமான பணிகளை மேற்கொண்டிருந்துள்ளார்.
அப்போது, 4 பேர் கொண்ட கும்பல் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் விடுதிக்குள் புகுந்து அஜித்தை சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அஜித், உயிரைக் காப்பாற்றிக்கொள்ள விடுதியில் இருந்து வெளியே ஓடி வந்துள்ளார். பின்னர் கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் மயங்கி கீழே விழுந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புதுச்சேரி கனக செட்டிகுளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அஜித்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அதிகாலை 4.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அஜித்தின் உறவினர்கள் மற்றும் பொம்மையார்பாளையம் பகுதி பொதுமக்கள் மருத்துவமனையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அஜித்தின் தந்தை பழனிவேல் அளித்த புகாரின் பேரில், கோட்டகுப்பம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். காவல் ஆய்வாளர் பாபு தலைமையில் நடைபெற்ற விசாரணையில், பொம்மையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மகன் ஹரிராஜ், சந்துரு மகன் பூபதி என்கிற சஞ்சய், அய்யப்பன் மகன் பிரதீஷ், வேலன் மகன் லோகேஷ் மற்றும் சிவக்குமார் மகன் சஞ்சய் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் சிறையில் அடைத்தனர். இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து பொம்மையார்பாளையம் பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால், அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்