
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூரை சேர்ந்தவர் 21 வயதுடைய வசந்தகுமார். இவரது தந்தை வெளியூரில் தங்கி வேலை பார்த்து வந்ததால் வசந்த குமார் அவரது பாட்டி வீட்டில் தங்கி வாழ்ந்து வந்திருக்கிறார். அப்போது வசந்தகுமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜான்பாண்டியன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது, இந்த பழக்கமானது நாளடைவில் நட்பாக மாறி இருவரும் எப்போதும் ஒன்றாக இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ஜான்பாண்டியனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தகராறு நடந்துள்ளது. அப்போது வசந்தகுமார், தனது நண்பர் ஜான்பாண்டியனுக்கு ஆதரவாக இருந்ததால் வேல்முருகன் வசந்தகுமாரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே முன்பகை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு வசந்தகுமாருக்கும், வேல்முருகனுக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது வேல்முருகனும், அவரது தந்தை பரமசிவமும் இணைந்து வசந்தகுமாரை கத்தியால் தாக்கியுள்ளனர். இதில் வசந்தகுமாருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. பதிலுக்கு வசந்தகுமார் தாக்கியதில் பரமசிவத்திற்கு கையில் காயம் ஏற்பட்டது. இதில் காயமடைந்த பரமசிவம் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துள்ளார். ஆனால் வசந்தகுமார் சிகிச்சை எடுக்காமல் காயத்துடன் பாட்டி வீட்டுக்கு சென்று விட்டார். பகல் முழுவதும் இவரை காணாத உறவினர்கள் பாட்டி வீட்டுக்கு சென்று பார்த்த போது ரத்த காயத்துடன் வசந்தகுமார் இறந்து கிடந்தது தெரியவந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேத்தூர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் போலீசார் ஜான்பாண்டியன், வேல்முருகன், பரமசிவம் மற்றும் மாசாணம் ஆகிய நால்வரிடம் எதற்காக தகராறு ஏற்பட்டது? யார் வசந்தகுமாரை கொலை செய்தது? இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.