“நகைக்காக தாயை கொன்ற டீச்சர் மகள்” - பாட்டியின் சடலத்தை பார்த்து கதறிய பேரன்.. கள்ளக்காதலனிடம் விசாரித்த போலீசார்!

அதற்கு கீதா மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது...
Walajapet Mother Murder
Walajapet Mother Murder
Published on: 
Updated on: 
2 min read

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே 30 சவரன் தங்க நகைகளை அடகு வைக்க மறுத்ததால் பெற்ற தாயைக் கொலை செய்ததாக மகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வீட்டில் கொள்ளை நடந்தது போல் நாடகமாடிவிட்டு, தாயின் இறப்புச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தது போலவும் அவர் நடித்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த தென்கடப்பந்தங்கள் விஐபி சிட்டி அருகே வசித்து வந்தவர் கீதா. இவரது கணவர் சென்னையில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களில் ஒரு மகள் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

மூத்த மகளான சரண்யா தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். கணவரை இழந்த சரண்யா, தனது இரண்டு குழந்தைகளுடன் தாய் கீதாவுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த (நவ 19) ஆம் தேதி மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சரண்யாவின் மகன் சக்தி, தனது பாட்டி கீதா பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாலாஜா போலீசார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கீதாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், கீதா கொலை செய்யப்பட்டதுடன், வீட்டிலிருந்த 10 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து, சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் போலீசார் தடயங்களைச் சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், கொலையாளிகளைக் கண்டறிய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, கீதாவின் மகள் சரண்யாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கடந்த 19-ம் தேதி தனது தேவைக்காகத் தாயிடம் இருந்த 30 சவரன் தங்க நகைகளை அடகு வைக்கக் கேட்டதாகவும், அதற்கு கீதா மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், ஆத்திரமடைந்த சரண்யா தனது தாயைத் தாக்கி கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், கொலைக்குப் பிறகு வீட்டில் கொள்ளை நடந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில், நகை மற்றும் பணத்தை எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. பின்னர், வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற சரண்யா, மாலையில் தனது தாயார் உயிரிழந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தது போல நாடகமாடியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, சரண்யாவின் கள்ளக்காதலன் எனக் கூறப்படும் சரண்ராஜ் என்பவரையும் போலீசார் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். இருப்பினும், இந்தக் கொலைச் சம்பவத்தில் அவருக்குத் தொடர்பு இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்ற தாயிடம் நகை கேட்டு ஏற்பட்ட தகராறில் அவரைக் கொலை செய்ததாக மகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள சம்பவம் வாலாஜாபேட்டை பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.