கைதிகளுக்கு க*** சப்ளை செய்த வார்டன் சஸ்பெண்ட்!

கைதிகளுக்கு க*** சப்ளை செய்த வார்டன் சஸ்பெண்ட்!
Published on
Updated on
1 min read

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் சிறையில் கஞ்சா, போதை மாதிரைகள், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனை சப்ளை செய்த வார்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

புழல் சிறையில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் அதிகளவில் புழங்குவதாக சிறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்த தகவலின் பேரில் சிறைகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அருண், சூர்யா, ஆல்வின், கல்லறை ஜான், காரிய ராஜ், ஜெபசிங் ஆனந்த் ஆகியோரிடம் இருந்து செல்போன் மற்றும் கஞ்சாவை  சிறைத்துறை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்களிடம் அதிகளவில் பணம் பெற்று புழல் சிறைக்குள் கஞ்சா மற்றும் போதை பொருட்களை சிறை வார்டன் திருமலை எடுத்து சென்று கொடுத்தது தெரியவந்துள்ளது.

ஏ.ஆர்.டி ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களாக இருந்த ஆல்வின் மற்றும் ராபின் ஆகியோர் அதிக வட்டி தருவதாக கூறி  பொதுமக்களிடம் 32கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் இருவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.  கைது செய்யப்பட்ட இருவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 

 ஏ.ஆர்.டி நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான ஆல்வின் அறையில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் சிலவற்றை பறிமுதல் செய்யப்பட்டது. போதை பொருட்கள் வந்தது எப்படி என சிறை அதிகாரிகள் ஆல்வினிடம் விசாரணை நடத்திய போது, சிறை வார்டன் திருமலை நம்பி ராஜா விநியோகம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக சிறை அதிகாரிகள் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் ஆறு சிறைக் கைதிகள் மீது போதை பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே சிறை வார்டன் திருமலையிடம் சிறைத்துறை உயரதிகாரிகள் துறை ரீதியான விசாரணை நடத்தி அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் இதே போல சிறை வார்டன் திருமலை எத்தனை சிறைவாசிகளுக்கு சப்ளை செய்துள்ளார், எவ்வளவு பணம் அதற்காக வாங்கியுள்ளார் என சிறை நிர்வாகம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com