உத்தரபிரதேச மாநிலம், அம்ரோஹா மாவட்டம், பிப்லொட்டி கால கிராமத்தை சேர்ந்தவர் மெஹ்ராஜ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரூஹி என்ற பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். மெஹ்ராஜ் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து குடும்பத்தை காப்பாற்றி வந்திருக்கிறார். இதற்கிடையில் ரூஹியின் சகோதரி அவரது வீட்டிற்கு அருகிலேயே குடிபெயர்ந்த நிலையில் இரு குடும்பத்தினர் நன்றாக பேசி பழகி வந்திருக்கின்றனர்.
அப்போது ரூஹிக்கும் அவரது சகோதரியின் மைத்துனன் ஃபார்மன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. பின்னர் அடிக்கடி ஃபார்மன் ரூஹி வீட்டிற்கு சென்று தனிமையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இருவரும் உறவினர்கள் என்பதால் யாருக்கும் சந்தேகம் ஏற்படாத நிலையில் இவர்களது உறவானது தொடர்ந்து வந்துள்ளது.
வழக்கம் போல ஃபார்மன் ரூஹியுடன் அவரது வீட்டில் தனிமையில் இருந்த போது எதிர்பாராத விதமாக வீட்டிற்கு சென்ற மெஹ்ராஜ் மனைவியின் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். பின்னர் இருவரையும் கண்டித்து ஃபார்மனை அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மெஹ்ராஜ் அவரது மனைவியை அடித்து துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது, எனவே ஆத்திரமடைந்த ரூஹி கணவனை கொலை செய்துவிட்டு காதலனுடன் வாழ திட்டமிட்டுள்ளார். cheating wife murder case
அதன்படி கடந்த (மார்ச் 29) ஆம் தேதி இரவு கணவருக்கு அளித்த உணவில் மயக்க மாத்திரை கலந்து கொடுத்த ரூஹி அவரை மயக்கமடைந்ததும் காதலனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அப்போது தனது நண்பர் ஒருவருடன் அங்கு வந்த ஃபார்மன் , மெஹ்ராஜை கழுத்தறுத்தும் கத்தியால் குத்தியும் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றிருக்கிறார். பின்னர் கணவரின் உடலை கட்டிலில் போட்ட ரூஹி சடலத்தின் அருகிலேயே குழந்தைகளுடன் இரவு முழுவதும் உறங்கியுள்ளார்.
பின்னர் விடிந்தவுடன் அப்பகுதிக்கு வந்த மெஹ்ராஜின் தந்தையிடம் “இரவு கொள்ளையர்கள் வீட்டிற்கு வந்து கொள்ளை அடித்ததாகவும், தடுக்க முயற்சித்த மெஹ்ராஜை கொலை செய்து விட்டதாகவும்” தெரிவித்தார். இதனை கேட்டு சந்தேகமடைந்த மெஹ்ராஜின் தந்தை “நீ என் இரவே என்னை அழைக்கவில்லை கத்தி கூச்சலிட்டு இருந்தால் அக்கம் பக்கத்தினர் வந்திருப்பார்கள்” என குறி வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். தொடர்ந்து அவர் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ரூஹிடம் விசாரணை நடத்தியபோது அவருக்கும் அவரது சகோதரியின் மைத்துனனுக்கும் தகாத உறவு இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து இருவரும் சேர்ந்து மெஹ்ராஜை கழுத்தறுத்து கொலை செய்ததும் அதற்கு ஃபார்மனின் நண்பர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்துள்ளது. எனவே போலீசார் மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மனைவியே கணவனை திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.