காதலனுடன் சேர்ந்து வாழ்ந்த மனைவி.. தனியே சந்தித்துக் கொலை! விமான நிலையத்தில் சிக்கிய முன்னாள் கணவர்!

மகளுடன் பேசுவதற்கு மனைவி அனுமதி அளிக்காததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது
chicago murder
Published on: 
Updated on: 
2 min read

அமெரிக்காவின் சிகாகோ நகரில், தன்னுடன் சேர்ந்து வாழ மறுத்து புதிய துணையுடன் வாழ்க்கையைத் தொடங்க விரும்பிய மனைவியை, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கணவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியைச் சந்திப்பதற்காக வரவழைத்து இந்தக் கொலையைச் செய்ததாகக் கூறப்படும் கணவர், பின்னர் இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது காவல்துறையினரிடம் சிக்கினார்.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசித்து வந்த 31 வயதான அங்குர் படேலுக்கும், அவரது 32 வயது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த மே மாதம், விஸ்கான்சினில் உள்ள குடும்ப வீட்டிலிருந்து மனைவி வெளியேறியதாகக் கூறப்படுகிறது.

குடும்ப உறுப்பினர்களின் வற்புறுத்தலால், பிரிந்த பிறகு சிறிது காலம் மீண்டும் கணவருடன் தங்கியிருந்த அந்தப் பெண், பின்னர் அவரிடமிருந்து விலகிச் சென்றார். இதையடுத்து, அவர் வேறொரு ஆணுடன் பழகத் தொடங்கி, லூசியானா மாகாணத்திற்குக் குடிபெயர்ந்தார். தங்களது மகளை மட்டும் கணவருடன் இருக்க அனுமதித்திருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அங்குர் படேல், மனைவியையும் அவரது புதிய துணைவரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும், மகளுடன் பேசுவதற்கு மனைவி அனுமதி அளிக்காததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நடைபெறுவதற்கு சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு, அங்குர் படேல் தனது மனைவிக்குத் தெரிவிக்காமல் சிகாகோவில் உள்ள உறவினர்களுடன் குடியேறியதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், தங்களது மகளை இந்தியாவில் உள்ள தனது பெற்றோரிடம் அனுப்பி வைத்துள்ளார்.

இதையடுத்து, மகளைச் சந்திக்கலாம் எனக் கூறி மனைவியைச் சிகாகோவிற்கு வரவழைத்துள்ளார். குழந்தை இந்தியாவிற்குச் சென்றுவிட்டது தெரியாமல், அந்தப் பெண்ணும் தனது புதிய துணைவரும் காரில் சிகாகோவிற்குச் சென்றுள்ளனர்.

அங்கு சென்றதும், படேலின் குடியிருப்பிற்கு மனைவி மட்டும் சென்றுள்ளார். அவரது புதிய துணைவர் கட்டிடத்திற்கு வெளியே காத்திருந்தார். ஆனால், வீட்டிற்குள் சென்றபோதுதான் மகள் அங்கு இல்லை என்பது அந்தப் பெண்ணுக்குத் தெரியவந்தது.

அப்போது, தன்னுடன் மீண்டும் சேர்ந்து வாழுமாறு அங்குர் படேல் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதற்கு மறுப்புத் தெரிவித்த அந்தப் பெண், தனது புதிய துணைவருடன் வாழப்போவதாகத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த படேல், மனைவியின் கழுத்தில் கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கட்டிடத்திற்கு வெளியே காத்திருந்த அந்தப் பெண்ணின் காதலன், அவருக்குத் தொடர்ந்து மெசேஜ் அனுப்பியுள்ளார். ஆனால், அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவர் காவல்துறையினரைத் தொடர்புகொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதையடுத்து, காவல்துறையினர் அந்தக் கட்டிடத்திற்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இருப்பினும், அந்தப் பெண் சென்ற குடியிருப்பை அவரது துணைவரால் சரியாக அடையாளம் காட்ட முடியாததால், காவல்துறையினர் அங்கிருந்து சென்றதாகக் கூறப்படுகிறது.

அன்று இரவு படேலைச் சந்திக்க வந்த அவரது நண்பர்கள், அவர் இல்லாததைக் கண்டு குடியிருப்பிற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது, சலவை இயந்திரத்திற்கு அருகில் அவரது மனைவி உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்தப் பெண்ணின் உடற்கூறாய்வில், தாக்குதலின்போது தற்காத்துக்கொள்ள முயன்றதற்கான பல காயங்கள் இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மனைவியைக் கொலை செய்த பின்னர், அங்குர் படேல் இந்தியாவுக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காகச் சிகாகோவில் உள்ள ஓ'ஹேர் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார். ஆனால், டிக்கெட் கவுண்டர் மூடப்பட்டிருந்ததால் அவரால் உடனடியாக விமான டிக்கெட் வாங்க முடியவில்லை. இதையடுத்து, அருகிலுள்ள ஹோட்டலில் தங்கிய அவர், கொலைக்குப் பயன்படுத்திய கத்தியை அப்புறப்படுத்தியதாகவும், பின்னர் டார்கெட் கடைக்குச் சென்று புதிய ஆடைகளை வாங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுநாள் இந்தியாவிற்குச் செல்வதற்கான விமான டிக்கெட்டை வாங்கியுள்ளார். இருப்பினும், விமானத்தில் ஏறுவதற்கு முன்பே காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். விசாரணையின்போது, தனது மனைவியைக் கொலை செய்யும் நோக்கம் ஆரம்பத்தில் தனக்கு இல்லை என்றும், ஆனால் அவர் புதிய துணைவருடன் வாழ விரும்புவதாகக் கூறியதால் அவரைக் கொன்றதாகவும் படேல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக அங்குர் படேல் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது முதல்நிலைக் கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிந்து வாழ்ந்த மனைவி புதிய வாழ்க்கையைத் தொடங்க விரும்பிய நிலையில், அவரைக் கொலை செய்துவிட்டு இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com