“பிரிட்ஜ்-குள் இருந்த மனைவியின் தலை.. துண்டாக்கப்பட்ட உடல்” - திருமணமான 6 மாதத்தில் நடந்தது என்ன?

அவரை வெள்ளிக்கிழமைதான் கடைசியாக பார்த்ததாக அக்கம்பக்கத்தினர் போலீசாரிடம் தெரிவித்தனர்
Guwahati murder
Published on
Updated on
2 min read

அசாம் மாநிலம் குவஹாத்தியில் திருமணமாகி சுமார் ஆறு மாதங்களே ஆன 25 வயது பெண் ஒருவர், தனது குடியிருப்பில் கொலை செய்யப்பட்ட சடலமாக கிடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் துண்டித்து  மீட்கப்பட்ட நிலையில், தலை பிரிட்ஜ்-குள் பாலித்தீன் பையில் வைக்கப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் அவரது கணவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். குவஹாத்தியின் பசிஸ்தாபூர் பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ரியா தாலுக்தார் கோஸ்வாமி (25) என்பவர் தனது கணவர் ராமானுஜன் கோஸ்வாமியுடன் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி, குடியிருப்பில் இருந்து மோசமான துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், கடந்த இரண்டு நாட்களாக அந்த தம்பதியினரையும் பார்க்கவில்லை என்றும், அவர்களது செல்போன்கள் அணைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்று சோதனை நடத்தினர். அப்போது பெண்ணின் உடல் துண்டிக்கப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடல் அழுகத் தொடங்கியிருந்ததாகவும், தலையை காணவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

தொடர்ந்து வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், பிரிட்ஜ்-குள் பாலித்தீன் பையில் வைக்கப்பட்டிருந்த, ரியாவின் துண்டிக்கப்பட்ட தலை கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவரது விரல்களும் துண்டிக்கப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்தபோது ராமானுஜன் வீட்டில் இல்லை. அவரை வெள்ளிக்கிழமைதான் கடைசியாக பார்த்ததாக அக்கம்பக்கத்தினர் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவரைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு ராமானுஜன் காவல்துறையிடம் சரணடைந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். குவஹாத்தி காவல்துறையின் தகவலின்படி, இந்த வழக்கில் ராமானுஜனே பிரதான குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் சரணடைந்த பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அவரது வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ள தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ள ஆதாரங்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டு வருகின்றன.

முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், சடலம் கண்டெடுக்கப்படுவதற்கு சுமார் 48 மணி நேரத்திற்கு முன்பே கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதற்கிடையே, ரியாவின் உடல் மற்றும் துண்டிக்கப்பட்ட தலை பிரேதப் பரிசோதனைக்காக குவஹாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே மரணத்திற்கான காரணம் மற்றும் நேரம் தொடர்பான கூடுதல் தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை. குடும்பத் தகராறா, வேறு ஏதேனும் காரணமா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பதையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். குற்றம் நடந்ததாகக் கூறப்படும் குடியிருப்பில் இருந்து சேகரிக்கப்பட்ட தடயங்கள் மற்றும் பிற ஆதாரங்கள் அடிப்படையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com