“3 மாத கைக்குழந்தையை விட்டுவிட்டு கள்ளகாதலனோடு ஓட்டம்” - அரசு பேருந்தில் சரமாரி அரிவாள் வெட்டு - கணவன் போட்ட 'கேங் ஸ்கெட்ச்'!

அப்போது பேருந்தில் பயணம் செய்த இருவர் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த
thiruvannamalai murder attempt
Published on
Updated on
2 min read

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த கொளமஞ்சனூர் அருகே அரசு பேருந்தில் இளைஞர் ஒருவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை கைது செய்து தண்டராம்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலையில் இருந்து தண்டராம்பட்டு வழியாக திருப்பூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்த போது, கொளமஞ்சனூர் பகுதியில் உள்ள புத்து கோவிலில் கற்பூரம் ஏற்றுவதற்காக சிறிது நேரம் பேருந்தை நிறுத்தி உள்ளார் ஓட்டுநர். அப்போது பேருந்தில் பயணம் செய்த இருவர் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த ஆனானந்தல் கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கர் என்பவரை மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். அதே வேளையில் இருசக்கர வாகனத்தின் பின் தொடர்ந்து வந்த மேலும் சிலர் பேருந்தில் ஏறி தாக்குதலில் ஈடுபட்டு விட்டு தப்பிச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திடீர் தாக்குதலால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்தபடி கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர். சரமாரி அரிவாள் வெட்டில் பலத்த காயமடைந்த சிவசங்கர், 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தண்டராம்பட்டு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தண்டராம்பட்டு காவல் நிலைய ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் திருவண்ணாமலை, தண்டராம்பட்டு உள்ளிட்ட இடங்களில் சிசிடிவி கேமரா, செல்போன் சிக்னல் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர். இந்த  விசாரணையின் போது சிவசங்கருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரேகா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரேகாவும் சிவசங்கரும் ஊரை விட்டு ஓடி சென்று திருமணம் செய்து திருப்பூரில் வாழ்ந்து வருகின்றனர். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ரேகாவின் கணவர் ரகு மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து தாக்குதலை நடத்தியது தெரிய வந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

thiruvannamalai murder attempt

இதையடுத்து அண்டம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த ரகு, கண்ணக்குருக்கை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், வேளானந்தல் கிராமத்தை சேர்ந்த ஆசைத்தம்பி மற்றும் மாதவன், ஆடையூர் பகுதியை சேர்ந்த சுகுமார் ஆகிய 5 பேரை கைது செய்த போலீசார் சம்பவத்தின் பின்னணி குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் போது ரகுவின் மனைவி ரேகாவை நான்காண்டுகளுக்கு முன்பு சிவசங்கர் மூன்று மாத கைக்குழந்தையை விட்டுவிட்டு அழைத்துச் சென்று திருமணம் செய்து திருப்பூரில் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவசங்கர் வழக்கு சம்பந்தமாக திருவண்ணாமலை நீதிமன்றத்திற்கு வந்துவிட்டு மீண்டும் திருப்பூர் செல்வதற்காக திருவண்ணாமலையில் பேருந்தில் ஏறி பயணம் செய்தார். இதனை அறிந்த ரகு தனது நண்பர்களிடம் கூறி சிவசங்கரை பின் தொடர்ந்து சென்றனர். அவர் ஏறிய பேருந்தில் இரண்டு நபர்கள் ஏறி நோட்டமிட்டு கொண்டிருந்தனர். ஆளில்லாத இடத்தில் சிவசங்கரை வெட்டுவதற்காக திட்டம் தீட்டப்பட்டிருந்தது. ஆனால் திடீரென பேருந்து கோவில் அருகே நின்றதால் அங்கேயே வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டோம் எனவும், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பகையின் காரணமாக வெட்டப்பட்டதாக போலீசாரிடம் கைது செய்யப்பட்ட நபர்கள் தெரிவித்தனர்.

மேலும் வெட்டு காயங்கள் அடைந்த இளைஞர் சிவசங்கர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார். மேலும் கள்ளக்காதல் தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அரசு பேருந்தில் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com