“புதுச்சேரியில் பட்டப்பகலில் பெண் படுகொலை” - கத்தரிக்கோலால் உடல் முழுவதும் குத்தி வெறிச்செயல்... 6 பவுன் நகைகள் மாயம்!

சம்பவ இடத்திலேயே ரத்தக்கறையுடன் கத்தரிக்கோலும் கிடந்ததாக கூறப்படுகிறது.
Puducherry
Puducherry
Published on
Updated on
1 min read

புதுச்சேரி கருவடிக்குப்பம் கெங்கையம்மன் கோவில் வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் 48 வயதுடைய மணி. இவரது மனைவி 42 வயதுடைய ரமணி. இவர்கள் தங்கள் வீட்டிற்கு அருகிலேயே டிபன் கடை வைத்து நடத்தி வந்துள்ளனர். வழக்கம் போல் காலை கடை வேலைகளை முடித்துவிட்டு ரமணி வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் பிற்பகலில் வீட்டிற்கு திரும்பிய மணி, வீடு பூட்டப்பட்டிருந்ததை கண்டு வழக்கமாக சாவி வைக்கும் இடத்திலிருந்து சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது வீடு முழுவதும் அலங்கோலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், மனைவியைத் தேடியுள்ளார்.

அப்போது சமையலறையை ஒட்டியிருந்த பின்புற பகுதியில், கழுத்து மற்றும் தலையில் கூர்மையான கத்தரிக்கோலால் பலமுறை குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் ரமணி உயிரிழந்து கிடந்தார். சம்பவ இடத்திலேயே ரத்தக்கறையுடன் கத்தரிக்கோலும் கிடந்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மணி உடனடியாக அக்கம் பக்கத்தினருக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த லாஸ்பேட்டை காவல் நிலைய போலீசார், ரமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு முக்கிய தடயங்களை சேகரித்தனர். முதற்கட்ட விசாரணையில், ரமணி அணிந்திருந்த சுமார் 6 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. அதேசமயம் வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்படாமலும், அதில் இருந்த மற்ற நகைகள் மற்றும் மதிப்புள்ள பொருட்கள் எதுவும் எடுக்கப்படாமல் இருந்துள்ளன. இதனால், நகையை குறிவைத்து கொலை செய்யப்பட்டதா அல்லது கொலைக்கு பிறகு சம்பவத்தை கொள்ளை போல சித்தரிக்க முயற்சி செய்யப்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

மணி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள லாஸ்பேட்டை போலீசார், குடும்ப விரோதம், முன்விரோதம், நகைக்காக நடந்த கொலை உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். பட்டப்பகலில் குடியிருப்பு பகுதியில் பெண் ஒருவர் வீட்டுக்குள்ளேயே கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com