

தைவானைச் சேர்ந்த ஒருவர், தனது மனைவி வேறொரு ஆணுடன் நிர்வாணமாக இருந்ததை ரோபோவை பயன்படுத்தி வீடியோவாக பதிவு செய்வதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தைவானை சேர்ந்த அந்த நபருக்கு, தனது மனைவி வேறொரு ஆணுடன் திருமணத்தை மீறிய தொடர்பில் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வீட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள அவர் மொபைல் செயலி மூலம் தனது வீட்டில் இருந்த ரோபோ வேக்கம் கிளீனரை இணைத்து நோட்டம் விட்டுள்ளார்.
ஆரம்பத்தில் மனைவியுடன் பேசுவதற்காகவே அந்த சாதனத்தைப் பயன்படுத்த நினைத்துள்ளார். ஆனால், வீட்டிற்குள் மற்றொரு நபர் இருப்பதை கவனித்ததும், ரோபோவில் இருந்த கேமரா ரெகார்ட் வசதியை இயக்கியதாக கூறப்படுகிறது. அப்போது பதிவான காட்சியில், அவரது மனைவி அந்த நபருடன் நிர்வாணமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்தக் காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு, தனது திருமண உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறி மனைவி மற்றும் அவருடன் வீட்டில் இருந்த நபருக்கு எதிராக சிவில் வழக்கு தொடர்ந்தார் கணவர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், இருவரும் இணைந்து கணவருக்கு NT$500,000 (இந்திய மதிப்பில் சுமார் ₹14.99 லட்சம்) இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
ஆனால், இந்த வழக்கில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. கணவர் பதிவு செய்த வீடியோ தொடர்பாக அவரது மனைவி தனியாக குற்றவியல் புகார் அளித்திருந்தார். தனது அனுமதியின்றி அந்தரங்கக் காட்சிகள் வேக்கம் கிளீனரை பயன்படுத்தி பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். ரோபோ கருவியை இயக்கி காட்சிகளைப் பதிவு செய்ததை கணவர் ஒப்புக்கொண்டார். எனினும், தனது சிவில் வழக்கில் ஆதாரமாக பயன்படுத்துவதற்காக மட்டுமே அந்தப் பதிவை மேற்கொண்டதாக அவர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார்.
இந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. திருமண உறவு அல்லது கணவன்- மனைவிக்கு இடையேயான உரிமைகள் இருப்பதால், ஒருவரின் தனியுரிமையை மற்றொருவர் மீறுவதற்கு அனுமதி கிடையாது என நீதிமன்றம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அந்த ரோபோ வேக்கம் கிளீனர் செயலி மூலம் வீட்டின் நேரலை காட்சிகளைப் பார்க்கும் வசதியைக் கொண்டிருந்தாலும், வீடியோவை சேமிக்க தனியாக பதிவு வசதியை இயக்க வேண்டியிருந்தது. பதிவு தொடங்கும்போது சாதனம் எச்சரிக்கை ஒலியையும் எழுப்பியதாக கூறப்படுகிறது. இருப்பினும், அந்த எச்சரிக்கை குறித்து மனைவிக்கு தெரிந்திருந்தது அல்லது அவர் பதிவு செய்ய சம்மதித்திருந்தார் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இதையடுத்து, மனைவியின் அனுமதியின்றி அவரது அந்தரங்கக் காட்சிகளை பதிவு செய்த குற்றத்திற்காக கணவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு ஐந்து மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாக தைவானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஒரே சம்பவத்தில் மனைவியின் கள்ளத்தொடர்பை நிரூபித்து சிவில் வழக்கில் வெற்றி பெற்ற கணவர், அதே ஆதாரத்தைப் பெற்ற விதத்தால் குற்றவாளியாகி சிறைத் தண்டனை பெற்றிருப்பது இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.