பெண் கழுத்தறுத்துக் கொலை.. சிவகங்கை சம்பவத்தில் வெளிவந்த திடுக்கிடும் வாக்குமூலம்! பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சியா?

கடந்த 4 முதல் 5 நாட்களாக வசந்த மல்லிகாவின் நடமாட்டத்தையும் வீட்டையும் நோட்டமிட்டுள்ளார்
sivagangai women murder
Published on: 
Updated on: 
2 min read

​சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 8 பவுன் நகைக்காக வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொடூரமாகக் கொலை செய்து  தப்பிய கொலையாளியைப் போலீசார் 15 மணி நேரத்திற்குள் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்ததும் தெரிய வந்துள்ளது. 

மானாமதுரை சி.எஸ்.ஐ. பள்ளி வளாக பகுதியில் ஈஸ்வரன் என்பவர் தனது மனைவி வசந்த மல்லிகாவுடன் (56) வசித்து வந்தார். நேற்று முன் தினம் ஈஸ்வரன் வெளியே சென்றிருந்த நேரத்தில் வீட்டின் உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர் தனியாக இருந்த வசந்த மல்லிகாவைக் கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்தார். பின்னர், அவர் அணிந்திருந்த 7 பவுன் தாலிச் சங்கிலி மற்றும் ஒரு பவுன் தங்கத் தோடு ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளார்.

பட்டப்பகலில் நடந்த இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டார். கொலை செய்து தப்பித்த குற்றவாளியை பிடிக்க உடனடியாகத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது சிப்காட் பாரதி நகர் பகுதியில் உள்ள ஒரு தோப்பில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்த சுப்பையா என்பது தெரியவந்தது. உடனடியாக அந்தத் தோப்பைச் சுற்றி வளைத்த போலீசார், அங்கு பதுங்கியிருந்த மல்லல் பகுதியைச் சேர்ந்த சுப்பையா (54) என்பவரை கைது செய்தனர். 

அவரிடமிருந்து கொலைசெய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து பறிக்கப்பட்ட 7 பவுன் தாலிச் சங்கிலியைப் போலீசார் மீட்டனர். திருடப்பட்ட ஒரு தங்கத் தோட்டையும் அவர் 16,000-க்கு விற்றுவிட்டது அம்பலமானது. மேலும் கைது செய்யப்பட்ட சுப்பையா அளித்த வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கொலை செய்யப்படுவதற்கு முன்பாக, வசந்த மல்லிகாவை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி  செய்ததாகவும், அதன் பின்னர் கழுத்தறுத்து கொன்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் வசந்த மல்லிகாவின் காதில் அணிந்திருந்த தங்கத் தோடுகளைக் கழட்ட முடியாத ஆத்திரத்தில், அவரது காதை அறுத்து தோடுகளைப் பறித்ததாகச் சுப்பையா தெரிவித்துள்ளார்.

sivangangai murder

சுப்பையாவின் மகள் சி.எஸ்.ஐ. பள்ளி வளாகம் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். மகளைப் பார்க்க அப்பகுதிக்கு அடிக்கடி வந்து சென்ற சுப்பையா, கடந்த 4 முதல் 5 நாட்களாக வசந்த மல்லிகாவின் நடமாட்டத்தையும் வீட்டையும் நோட்டமிட்டுள்ளார். சம்பவத்தன்று திட்டமிட்டு சைக்கிளில் வந்த சுப்பையா, வீட்டில் யாரும் இல்லாததை உறுதி செய்து வீட்டிற்குள் புகுந்து இக்கொடூர செயலை அரங்கேற்றியுள்ளார்.

சுப்பையாவின் மகன் கோவையில் வசித்து வருவதாகவும், அவர் மீது ஏற்கனவே மூன்று கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. திருடப்பட்ட தோட்டை யாரிடம் விற்றார் என்பது குறித்தும், இந்தக் கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் சிப்காட் காவல் நிலையத்தில் வைத்து சுப்பையாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

கொலை நடந்த 15 மணி நேரத்திற்குள் கொலையாளியை கைது செய்து நகையை மீட்ட தனிப்படை போலீசாரைப் பொதுமக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர். இருப்பினும், பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்து பெண் படுகொலை செய்யப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கையில் தொடர்ந்து இது போன்ற கொலை சம்பவங்கள் அரங்கேறி வருவது, மாவட்டம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்