தோட்டத்தை உரிமை கொண்டாடிய தொழிலாளி… அடித்து விரட்டிய குடும்பம்..

போச்சம்பள்ளியில் தோட்ட காவலாளியின் குடும்பத்தை உரிமையாளரின் குடும்பம் அடித்து விரட்டியுள்ளது. வெளியேற மறுத்த குடும்பத்தினர் மிளகாய்ப்பொடியை தூவி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தோட்டத்தை உரிமை  கொண்டாடிய தொழிலாளி… அடித்து விரட்டிய குடும்பம்..
Published on
Updated on
2 min read

கிருஷ்ணகிரி : போச்சம்பள்ளியை அடுத்த பனங்காட்டூர் அருகே உள்ள காவேரிப்பட்டிணம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவருக்கு சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் தென்னை தோப்பு இருந்த நிலையில் இதனை காப்பதற்கு முத்து என்பவரை நியமித்திருந்தார் மோகன். 

40 ஆண்டுகளாக தென்னை, வாழைத் தோப்புகளை பராமரித்து வந்த முத்து அங்கேயே ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து குடும்பத்துடன் வசித்து வந்தார். மோகனும், தோட்டத்தை பாதுகாப்பாக பார்த்துக் கொள்வார்கள் என நினைத்து முத்துவின் குடும்பத்தினரை உள்ளேயே தங்குவதற்கு அனுமதித்திருந்தார். 

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மோகன் குடும்பத்தினர் காவலாளி முத்துவை தோட்டத்தில் இருந்து வெளியேறுமாறு கோரியுள்ளனர். தோட்டத்தை விட்டு வெளியே சென்று வேறு இடத்தில் தங்கிக் கொள்ள வேண்டும் என்றும், காவல் காக்க மட்டுமே உள்ளே வர வேண்டும் என்றும் கூறியுள்ளனர். 

ஆனால் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த முத்து, தன் குடும்பத்துக்கு குறிப்பிட்ட தொகை பணம் தந்தால் இந்த இடத்தை விட்டு வெளியேறி விடுவேன் என நிபந்தனை வைத்துள்ளார். இதற்கு மோகன் குடும்பத்தினர் மறுத்ததையடுத்து இருவருக்குள்ளும் தகராறு எழுந்தது. 

40 வருடங்களாக உரிமையாளரின் தோட்டத்தை தன் தோட்டமாக கருதி ஆண்டு அனுபவித்தது போதும், இதற்கு மேலும் இங்கு இருக்கக்கூடாது என அதிரடியாக வெளியேற்றியுள்ளனர். தனக்கு பணம் அல்லது மாற்று இடம் வழங்காத வரை தோட்டத்தை விட்டு நகர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த விட்டார் முத்து. 

இதனால் கோபமடைந்த மோகன் குடும்பத்தினர் சுமார் 50 பேர் தோட்டத்துக்குள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்தனர். சிறிய வீட்டில் வசித்து வந்த முத்து மற்றும் குடும்பத்தினரை மிரட்டியவர்கள், வீடுகளை உடைப்பதும், வீட்டுக்குள் இருந்த பொருட்களை எடுத்து வெளியே தூக்கி எறிவதும் என அப்புறப்படுத்தும் வேலையில் இறங்கினர். 

தங்களை வீட்டை விட்டே துரத்துவதற்கு வந்தவர்க எதிர்க்க நினைத்த முத்து குடும்பத்தினர் சமையலறையில் இருந்த மிளகாய் பொடி, மஞ்சள்பொடி ஆகியவற்றை எடுத்து எதிர்தரப்பினர் மீது எறியத் தொடங்கினர். இந்த பிரச்சினையில் பெரியவர்கள் தலையிட்டால் வழக்கில் சிக்கிக் கொள்ள நேரிடும் என நினைத்த மோகன் குடும்பத்தினர் ஆயுதங்களை சிறுவர்களின் கைகளில் கொடுத்து அழகு பார்த்தனர். 

அரிவாள், கடப்பாரை போன்ற பயங்கர ஆயுதங்களை கைப்பற்றிய சிறுவர்கள், தோப்புகளில் புகுந்து வாழைமரங்களை சரமாரியாக வெட்டி வீசத் தொடங்கினர். மேலும் முத்துவின் வீட்டை கடப்பாரையைக் கொண்டு இடித்து தரைமட்டமாக்க முயற்சித்தனர். 

இந்த சம்பவம் குறித்து அறிந்த போச்சம்பள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருதரப்பினரிடையே விசாரணை நடத்தி வருகின்றனர். தன்னை நம்பியவர்களை பாதுகாக்க மறந்தது உரிமையாளரின் தவறு என்றால், உரிமையாளரின் இடத்தையே அபகரிக்க நினைத்தது காவலாளியின் தவறாகும். இவர்களின் இட தகராறுக்கு சட்டம் வழங்கும் தீர்ப்பு என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..?

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com