“15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய உறவுக்காரர்” - சார்ஜர் போட வருவதாக கூறி வீட்டிற்குள் அத்துமீறல்! 9 மாதத்திற்கு பிறகு வெளிவந்த உண்மை?

கடந்த சில நாட்களாக சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது..
salem pocso case
Published on
Updated on
1 min read

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியதாகக் கூறப்படும் 25 வயது இளைஞரை, சங்ககிரி அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சிறுமி 9 மாத கர்ப்பமாக இருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்ததைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் 23-ம் தேதி சிறுமி வீட்டில் தனியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அவரது உறவினரான மோகன் (25), செல்போனுக்கு சார்ஜ் போட வேண்டும் எனக் கூறி சிறுமியின் வீட்டிற்கு வந்துள்ளார். உறவினர் என நம்பி வீட்டிற்குள் வந்ததை சந்தேகிக்காமல் சிறுமியும் இருந்துள்ளார். வீட்டிற்குள் சென்ற பின்னர், மோகன் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனக்கு நேர்ந்த சம்பவத்தை யாரிடமும் தெரிவித்தால், சிறுமிக்கு தான் அவமானம் ஏற்படும் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அச்சமடைந்த சிறுமி, தனக்கு நேர்ந்த சம்பவத்தை உடனடியாக யாரிடமும் தெரிவிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த சில நாட்களாக சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது தாய், சிறுமியை சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது, அவர் 9 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அப்போது அவருக்கு நேர்ந்ததாகக் கூறப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவம் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து, சிறுமியின் தாய் சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, சிறுமியின் உறவினரான மோகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மோகனை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், சிறுமிக்கு மருத்துவ உதவிகள் மற்றும் தேவையான பாதுகாப்பு வழங்குவது தொடர்பாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 15 வயது சிறுமி 9 மாத கர்ப்பமாக இருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை மிரட்டி சம்பவத்தை வெளியில் தெரிவிக்க விடாமல் தடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com