

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உப்பாற்று பகுதியில் இளைஞர் ஒருவர் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் மர்மமான முறையில்.இறந்துகிடந்த நிலையில் சடலத்தை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளியாகியுள்ளன.
மானாமதுரை அருகே உள்ள வைகை மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த இளங்கோ என்பவரின் மகன் லோகேஸ்வரன் (25 வயது). இவர் தனது தாயுடன் பெரியகோட்டை கிராமத்தில் வசித்து வந்தார். இவர் விறகு வெட்டும் வேலை செய்து வருகிறார். கடந்த 13 -ஆம் தேதி மாலை வீட்டை விட்டு கிளம்பிப்போன லோகேஸ்வரன் இரவு நெடுநேரமாகியும் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் அவரை ஊர் முழுக்க தேடியுள்ளனர். ஆனால் அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை, பதற்றமான உறவினர்கள் போலீசில் புகார் அளிக்க நினைத்துள்ளனர். அப்போதுதான் கடந்த 15 -ஆம் தேதி மாலையன்று அதே பெரியகோட்டையில் உள்ள உப்பாற்று படுகையில் உள்ள கருவேலங்காட்டுக்குள் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், மானாமதுரை சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே உடனடியாக சம்பவ இடம் சென்ற மானாமதுரை டி.எஸ்.பி பார்த்திபன் தலைமையிலான காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததுடன் அப்பகுதியில் தடயங்களை சேகரித்து விசாரணையை துவங்கினர்.
இந்நிலையில் லோகேஸ்வரனின் உடன்பிறந்த சகோதரரான பிரகாஷிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரை அழைத்து சென்று காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதில் இறந்துபோன லோகேஸ்வரன் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவரை கட்டுப்படுத்த முடியாமல் இருந்ததால் கைகளை கயிறு கொண்டு கட்டி வைத்திருந்ததாகவும், மருத்துவமனைக்கு அவரை அழைத்து செல்ல முற்பட்டபோது அவர் இயற்கை உபாதை கழிக்க கோரிக்கை விடுத்ததால் கயிறுகளை அங்கிருந்த அரிவாளால் கத்தரித்து அனுப்பியதாகவும், ஆனால் அவர் அங்கிருந்து உப்பாற்றுக்குள் தப்பி செல்லவே துரத்தி சென்றபோது தவறுதலாக அவரது பின்னங்கழுத்தில் வெட்டுக்காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாகவும், அதனை அடுத்து தான் காவல்துறைக்கு பயந்து வெளியே சொல்லாமல் வீட்டில் சென்று உறங்கியதாகவும்’ வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனை அடுத்து சிப்காட் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். மேலும் கைதான சகோதரர் பிரகாஷும் சற்று மன நலம் பாதிக்கப்பட்டது போல் காணப்படுவதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.