
கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள சிந்தாமணிபுதூர் பகுதியில் உள்ள குடியிருப்பில் ஒரு தம்பதியினர் தங்களது இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். மேலும் இவர்களது வீட்டிற்கு மேல் பகுதியில் சில இளைஞர்கள் வாடகைக்கு அறை எடுத்து வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களது மகள் (செப் 27) ஆம் தேதி காலை குளிப்பதற்காக வீட்டில் உள்ள குளியலறைக்கு சென்ற போது சுவரில் இருந்த ஓட்டை வழியாக யாரோ செல்போன் மூலம் வீடியோ எடுப்பது போல தெரிந்துள்ளது. இதனால் அந்த பள்ளி மாணவி கூச்சலிட்டு கொண்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் மற்றும் அருகில் வசித்து வந்தவர்கள் உடனடியாக வெளியே வந்து பார்த்த போது மற்றொரு குளியல் அறையில் இருந்து செல்போனுடன் ஒரு வாலிபர் வெளியே வந்து இவர்கள் தங்கி இருக்கும் வீட்டின் மேல் மாடியில் உள்ள வாலிபர்கள் தங்கி இருக்கும் அறைக்கு ஓடியுள்ளார். உடனே அந்த வாலிபரை பொதுமக்கள் விரட்டிச் சென்று பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது அவரது செல்போனில் பெண்கள் பள்ளி மாணவிகள் குளிக்கும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
எனவே அவர்களிடம் இருந்து தப்ப முயன்ற அந்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து சூலூரில் உள்ள கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை செய்ததில் அவர் சின்ன சேலம், சீரகப்பாடியை சேர்ந்த 20 வயதுடைய ராஜேஷ் கண்ணா என்பதும், அவர் கடந்த நான்கு நாட்களாக மேலே உள்ள வாலிபர்கள் அறையில் தங்கியிருந்ததும் தெரியவந்தது.
மேலும் அவரது செல்போனை பறிமுதல் செய்து சோதனை செய்த போது அதில் பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகள் குளிக்கும் ஏராளமான வீடியோக்கள், ஆபாச வீடியோக்கள் போட்டோக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். பெண் குளிப்பதை வீடியோ எடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.