

நடிகை கௌதமி தனக்குச் சொந்தமான ரூ.25 கோடி மதிப்புள்ள நிலத்தை அன்பழகன் என்ற நபர் ஏமாற்றி ரூ.6 கோடிக்கு விற்றுவிட்டதாக, 2023-ம் ஆண்டு பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.
இந்த வழக்கில் தற்போது 4 பேர் கைது செய்யப்பட்டு, 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நடிகை ஏமாந்தது எப்படி, 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் குடும்பம் கைது செய்யப்பட்டது வரை என்ன நடந்தது என்பதைப் பார்க்கலாம்.
நடிகை கௌதமியின் புகாரின்படி, அன்பழகன் என்ற நபர் குடும்ப நண்பராக அவருக்கு அறிமுகமாகியிருக்கிறார். அவர் ஒரு அரசியல் கட்சியிலும் பயணித்து வந்துள்ளார். கௌதமிக்கு உடல்நிலை மோசமாக இருந்தபோது, அழகப்பனுக்கு தனது சொத்துக்களை நிர்வகிக்கும் அதிகாரத்தை வழங்கியிருக்கிறார்.
நடிகை கௌதமி தனது புற்றுநோய் சிகிச்சை மற்றும் மக்களின் படிப்புச் செலவுக்காக, ஸ்ரீபெரும்புதூரில் தனக்கு இருந்த 46 ஏக்கர் நிலத்தை விற்க வேண்டிய நெருக்கடியில் இருந்துள்ளார். அப்போது அன்பழகன் அவரிடம் ஒரு பத்திரத்தில் கையெழுத்து வாங்கிவிட்டு, ரூ.25 கோடி மதிப்புள்ள அந்த நிலத்தை ஏமாற்றி ரூ.6 கோடிக்கு கைமாற்றிவிட்டதாகவும், அத்துடன் அவரது பிற சொத்துக்களையும் கையகப்படுத்தியுள்ளதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
கௌதமியின் புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். நீண்ட காலமாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில், பின்னர் மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு வழக்கு மாற்றப்பட்டது.
இந்த மோசடிகளில் அழகப்பனின் குடும்பத்தினரும் நண்பர்களும் பங்கு பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. மோசடி செய்த பணத்தை வைத்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் முதலீடு செய்து, சொத்துகளைக் குவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட அழகப்பன் திடீரென தலைமறைவானார். இதனைத் தொடர்ந்து, அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, பல்வேறு மாநிலங்களில் காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில், கேரள மாநிலம் திருச்சூரில் தலைமறைவாக இருந்த அழகப்பனையும் அவரது குடும்பத்தினரையும் மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவ்வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் (Money Laundering) நடைபெற்றதற்கான வலுவான ஆதாரங்கள் இருந்ததால், அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக, கடந்த மாதம் 17-ஆம் தேதி, அழகப்பனுக்குச் சொந்தமான 6 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தினர். இதுகுறித்து விசாரிப்பதற்காக, கடந்த ஆண்டு கௌதமிக்கு சம்மன் அனுப்பினர்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான கௌதமி, 9 மணி நேர விசாரணைக்குப் பிறகு, இதுகுறித்து விரிவாகப் பேச இயலாது என்றும், விரைவில் முழு விவரங்களைத் தெரிவிப்பதாகவும் கூறிச் சென்றார்.
இந்த நிலையில், கௌதமியின் ரூ.25 கோடி மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாக விற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் அழகப்பன், அவரது மனைவி, மகன் மற்றும் மருமகள் ஆகியோரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதில், மருமகள் நான்சி கைக்குழந்தையுடன் இருப்பதால், நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் அளித்துள்ளது. பின்னர், மற்ற மூவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, இந்த விவகாரத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.