
பூந்தமல்லி அருகே உள்ள குமணன்சாவடி பகுதியை சேர்ந்தவர் 20 வயதான சங்கவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் மதுரவாயல் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் படிக்கும் புருஷோத்தமன் என்ற மாணவனும் சங்கவியும் நட்பாக பழகி வந்துள்ளனர். இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
புருஷோத்தமன் அவ்வப்போது தனது செலவுகளுக்காக மாணவியிடம் பணம் வாங்கி வந்துள்ளார். தனக்கென இருசக்கர வாகனம் வைத்திருந்த புருஷோத்தமன் அதில் மாணவியை பல இடங்களுக்கு அழைத்து சென்று ஊர் சுற்றியுள்ளார். கார் வாங்க வேண்டும் என நினைத்த புருஷோத்தமன் மாணவிக்கு காரில் சுற்ற வேண்டும் என்ற ஆசையை துண்டியுள்ளார்.
இதனால் மாணவி அவரது தந்தை சேர்த்து வைத்திருந்த பணத்தில் இருந்து 20 லட்சம் ரூபாயை வீட்டில் யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்து புருஷோத்தமனுக்கு கொடுத்துள்ளார். அந்த பணத்தை வைத்து கார் வாங்கிய புருஷோத்தமன் தினம் கல்லூரிக்கு காரில் வந்துள்ளார். கார் வாங்கிய பிறகு சங்கவியிடம் சரிவர புருஷோத்தமன் பேசவில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சங்கவியின் பெற்றோர் அவர்களது மகனை பள்ளியில் சேர்க்க அந்த பணத்தை தேடியுள்ளனர். அப்போது பணம் வீட்டில் இல்லததால் அதிர்ச்சியடைந்த சங்கவியின் தந்தை வீட்டில் இருந்த அனைவரிடமும் இதை பற்றி கேட்டுள்ளார். சங்கவி தனது தந்தையிடம் புருஷோத்தமனுக்கு பணம் கொடுத்து கார் வாங்கியதை பற்றி கூறியுள்ளார்.
மாணவியை அழைத்து கொண்டு கோயம்பேடு காவல் நிலையத்திற்கு சென்ற தந்தை தனது மகளிடமும் புருஷோத்தமனிடமும் விசாரித்து தனது பணத்தை மீட்டு தருமாறு புகாரளித்துள்ளார். புகாரை ஏற்று விசாரணை நடத்திய போலீசார் புருஷோத்தமனிடம் இருந்த காரினை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி தானாக முன்வந்து பணத்தை கொடுத்தாரா அல்லது மாணவியை மிரட்டி பணம் வாங்கினாரா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.