“ஏசி மெக்கானிக் தூக்கிட்டு தற்கொலை” - தொழில் முன்னேற்றத்திற்கு வாங்கிய கிரெடிட் கார்டு.. அடுத்தடுத்து உயர்ந்த கடன் தொகை!
செங்கல் பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதுடைய சலீம். இவர் டிப்ளமோ படித்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் சலீமிற்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவர்களது பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு சலீம் புது பெருங்களத்தூர் அருகே எஸ் எஸ் எம் நகரில் ஏசி பழுது பார்க்கும் கடை நடத்தி வந்தார். வியாபாரம் நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில் ஏசி பழுது பார்க்க சில பொருட்களை வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
எனவே தேவையான பொருட்களை வாங்கவும், சில வீட்டு தேவைகளுக்காகவும் இவர் கிரெடிட் கார்டு மூலமாக அதிக கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அதனை சரிவர கட்ட முடியாமலும் தொழில் எதிர்பார்த்த லாபம் வராத நிலையிலும் ஏற்கனவே வாங்கி கடனை அடைக்க வேறு கடன் வாங்கியுள்ளார். இது போல பல லட்சம் கடன் ஆகிவிட்ட நிலையில் இ.எம்.ஐ கட்ட முடியாமலும் குடும்பத்தின் செலவுகளை சமாளிக்க முடியாமலும் அவதிப்பட்டு வந்துள்ளார்.
கடைக்கு வேலைக்கு செல்லும் சலீம் மதியம் உணவருந்த வீட்டிற்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் கடைக்கு சென்ற சலீம் மதியம் உணவருந்த வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார். இதனால் சலீமின் மனைவி பலமுறை அவருக்கு போன் செய்தும் போன் எடுக்காததால் சந்தேகமடைந்து. இது குறித்து அவர்களது உறவினர்களிடம் தெரித்துள்ளார்.
இதனை அடுத்து சலீமின் நெருங்கிய உறவினர் ஒருவர் கடைக்கு சென்று பார்த்தபோது கடை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது, எனவே கடையின் பூட்டை உடைத்து திறந்து பார்த்தபோது உள்ளே மின் விசிறியில் தூக்கில் தொங்கியவாறு சலீம் இருந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது தொடர்பாக பெருங்களத்தூர் பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலின் அடிப்படையில் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற போலீசார், சலீம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சலீம் தற்கொலை செய்து கொண்டதற்கு கடன் தொல்லை தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து சலீமின் செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லை காரணமாக ஏசி மெக்கானிக் கடையிலேயே தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.