திருடப்பட்ட பைக்-கை ‘48’ மணி நேரத்தில் கண்டுபிடித்த சென்னை போக்குவரத்து போலீசார்!

வாகன சோதனையின் பொழுது திருடிய வாகனத்தை அங்கேயே விட்டு தப்பி ஓடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருடப்பட்ட பைக்-கை ‘48’ மணி நேரத்தில் கண்டுபிடித்த சென்னை போக்குவரத்து போலீசார்!
Published on
Updated on
2 min read

சென்னை | ராயபுரம் எம் எஸ் கோயில் தெரு சிமெண்ட் ரோடு சந்திப்பு பகுதியில் கடந்த 10 ஆம் தேதி  போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.  அப்பொழுது அந்த வழியாக பாண்டிச்சேரி பதிவு எண் கொண்ட ஒரு இருசக்கர வாகனத்தில் இருவர் அதிவேகமாக வந்துள்ளனர். 

இதனை கண்ட போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகனத்தை மடக்கி பிடித்த உடன் வண்டியில் பயணம் செய்த இருவரும் வண்டியை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடி உள்ளனர். இதனைத் தொடர்ந்து ராயபுரம் காவல் நிலையத்திற்கு அந்த இருசக்கர வாகனத்தை கொண்டு வந்து பதிவெண் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அந்த வாகனம் பாண்டிச்சேரியை  சேர்ந்த மருத்துவர் அழுமொல் ரிஷிதர் என்பவருக்கு சொந்தமான வாகனம் என தெரிய வந்தது. உடனே பாண்டிச்சேரியில் உள்ள ரிஷிதரை செல்போன் மூலமாக ராயபுரம் போக்குவரத்து போலீசார் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர்.

அப்பொழுது ரிஷிதர் விழுப்புரம் மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியில் தனது வாகனத்தை மர்ம நபர்கள்  திருடி சென்று விட்டதாகவும் இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து விழுப்புரம் போலீசார் மற்றும் ரிஷிதரை சென்னை வரவழைக்கப்பட்டனர் அவர்களிடம் இருசக்கர வாகனம் தொலைந்து போனதற்காக காவல்துறை தரப்பில் வழங்கிய முதல் தகவல் அறிக்கையை பெற்றுக்கொண்டு அவரிடம் மீண்டும் அவரது இரு சக்கர வாகனம் ஒப்படைக்கப்பட்டது.

வண்டி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வாகன தணிக்கை சோதனையின் போது வாகனத்தை அங்கேயே விட்டுச் சென்ற இருவர் மீது ராயபுரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருடு போன தனது இருசக்கர வாகனத்தை 48 மணி நேரத்தில் கண்டுபிடித்து கொடுத்ததற்காக ரிஷிதர் கடிதம் மூலம் நன்றியை சென்னை போலீசாருக்கு தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தை சென்னை போக்குவரத்து போலீசார் தங்களுடைய டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com