“பயிற்சிக்கு வந்த இன்சூரன்ஸ் ஊழியர்” - அலங்கார விளக்கிலிருந்து கசிந்த மின்சாரம்.. இப்படியும் சாவு வருமா?
கோவை சேர்ந்தவர் 35 வயதான பிரகாஷ் ராஜ். இவருக்கு திருமணமாகி கெளசல்யா என்ற மனைவியும் ஒரு கை குழந்தையையும் உள்ள நிலையில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் இவர் பயிற்சிக்காக நிறுவனத்தின் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவையிலிருந்து சென்னைக்கு கிளம்பிய இவர் திங்கள்கிழமை பயிற்சியை முடித்து விட்டு அறைக்கு சென்றுள்ளார். அதே போல் நேற்று பயிற்சியை முடித்து விட்டு அறைக்கு செல்லும் போது வள்ளுவர் கோட்டம் பகுதியில் உள்ள ஒரு டீ கடைக்கு டீ குடிக்க சென்றுள்ளார்.
அப்போது கடையின் முன்பு சாலையில் தேங்கி இருந்த மழை நீரில் வழுக்கி கீழே விழுந்து மேலே எழுவதற்காக அருகில் நடைபாதையில் இருந்த கம்பியை பிடித்துள்ளார். கம்பியில் கசிந்த மின்சாரம் தாக்கி மயங்கி உள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
கடையில் அலங்காரத்திற்காக பொருத்தப்பட்ட மின் விளக்குகளில் இருந்து கசிந்த மின்சாரம் கம்பியில் பாய்ந்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கடையின் உரிமையாளரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவரை இழந்து தவிக்கும் கெளசல்யா இது குறித்து பேட்டியளித்துள்ளார்.
அதில் “கடைக்காரர் மீதும் மின்வாரிய ஊழியர்கள் மீதும் புகாரளிப்பதாகவும், கணவனை இழந்து தவிக்கும் தனக்கு தமிழ்நாடு அரசு உதவி செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றும் கணவரை இழந்து 7 மாத குழந்தையை வைத்து கொண்டு செய்வதறியாது தவித்து வருகிறேன்” என்றும் கூறியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்