
பல்வேறு படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தனது நடிப்பு திறமையாலும், குரல்வளத்தினாலும் நம்மை சிரிக்கவும், ரசிக்கவும் வைத்தவர் ரோபோ சங்கர். உலக நாயகன் கமல்ஹாசனை தனது மானசீக குருவாக ஏற்றுக் கொண்டு தன்னை நடிப்பில் ஈடுபடுத்திக் கொண்டவர். ஒரு முறையாவது கமலுடன் சேர்ந்து நடித்து விட வேண்டும் என்பது தான் ரோபோ சங்கர் மிக பெரிய ஆசையாக இருந்தது. இந்நிலையில் நேற்று உடல்நிலை பாதிப்பு காரணமாக ரோபோ சங்கர் உயிரிழந்தார்.
ரோபோ சங்கரின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட அவரது குருவான கமல்ஹாசன், மனைவி மற்றும் மகளுக்கு தனது ஆறுதலை தெரிவித்து அவரது உடலுக்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினார். பொதுவாக கமல்ஹாசன் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்வது கிடையாது. “தனது குரு மற்றும் தனது வளர்ச்சியில் குடும்பத்திற்கு அடுத்து பெரும் பங்காற்றியவர் இயக்குநர் பாலச்சந்தர்” என கமல் கூறுவார். இருப்பினும் அவரது இறுதிச் சடங்கில் கூட கமல் கலந்து கொள்ளவில்லை.
இதை பற்றி பேசிய கமல் “பிறந்தநாள் மற்றும் இறப்பு என்பது அனைத்து மனிதர்களின் வாழ்க்கையிலும் சாதாரணமானது, எனக்கு அவற்றில் பெரிய நம்பிக்கை இல்லை” என தெரிவித்திருந்தார். எனவே பல்வேறு திரைபிரபலங்களின் மறைவிற்கு இறுதிச் சடங்கின் போது செல்லாமல், பிறகு சென்று ஆறுதல் தெரிவித்திருந்தார். இருப்பினும் சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் மருமகனின் தந்தையான வேதமூர்த்தி, இறந்த போது அவரின் இறுதி சடங்கில் கமல்ஹாசன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி இருந்தார்.
உலக நாயகன் என்ற பெருமைக்குரிய கமல்ஹாசன் நினைத்திருந்தால் ரோபோ சங்கரின் இறுதி சடங்கில் கலந்துகொள்ளாமல் பின்னர் வந்து ஆறுதல் தெரிவித்திருக்கலாம். ஆனால் தனது தீவிர ரசிகர் என்ற காரணத்தால் அவரது கொள்கைகளை விட்டுவிட்டு இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது ரோபோ சங்கரின் மகளும் நடிகையுமான இந்திரஜா அவரை பார்த்ததும் “அப்பா பாருங்க யாரு வந்துருக்காங்கனு பாருங்க.. கமல் சார் நம்ம வீட்டுக்கு வந்து இருக்காரு பாருங்க, எழுந்துருங்க பா.. சார் எங்க அப்பா கிட்ட பேசுங்க சார் அவர் எழுந்துக்குவாரு..” என கதறி அழுத செயல் பார்ப்போரை கண்கலங்க வைத்தது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.