“நாள் முழுவதும் தேடப்பட்ட சிறுமி.. சடலமாக மீட்பு” - கடலுக்கு சென்றவர்களுக்கு காத்திருந்த சோகம்.. 4 வயது மகளை இழந்த தாய்!

விஜி மற்றும் இரண்டு குழந்தைகளையும் கடலுக்குள் இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது...
Kanyakumari Sea Wave Accident
Kanyakumari Sea Wave Accident
Published on: 
Updated on: 
1 min read

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே, கடலில் ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி மாயமான 4 வயது சிறுமி, மறுநாள் மணக்குடி கடல் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வடசேரி ராமன்புதூரைச் சேர்ந்தவர் ராஜன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருடன் திருமணமாகி, அவர்களுக்கு கேபின் விஜோஷ் மற்றும் அலி கியானா சல்மா என 2 குழந்தைகள் உள்ளனர். இரண்டு வருடங்களாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று(செப் 27) பிரியதர்ஷினி தனது இரண்டு குழந்தைகளுடன் ஈத்தாமொழி அருகே உள்ள கேசவன் புத்தன்துறை மீனவ கிராமத்தில் வசிக்கும் உறவினர் விஜியின் வீட்டிற்கு சென்றுள்ளார். மாலை நேரத்தில் பிரியதர்ஷினி, தனது இரண்டு குழந்தைகள் மற்றும் உறவினர் விஜியுடன் கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென எழுந்த ராட்சத கடல் அலை, பிரியதர்ஷினி, விஜி மற்றும் இரண்டு குழந்தைகளையும் கடலுக்குள் இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அப்பகுதி மீனவர்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டு, விஜி, பிரியதர்ஷினி மற்றும் கேபின் விஜோஷ் ஆகிய 3 பேரையும் மீட்டனர். ஆனால், 4 வயது சிறுமி அலி கியானா சல்மாவை கடல் அலை இழுத்துச் சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், இரவு நேரமானதால் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து இன்று காலை மீண்டும் தேடுதல் பணி நடைபெற்றது. அப்போது மணக்குடி கடல் பகுதியில் சிறுமி அலி கியானா சல்மாவின் உடல் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறுமியின் உடல் உடற்கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், சம்பவம் தொடர்பாக ஈத்தாமொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடல் அலையில் சிக்கி 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவமும் அவரது உடலை பார்த்து தாய் கதறிய சம்பவமும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com