“தமிழ்நாட்டையே உலுக்கிய இரட்டை ஆணவ படுகொலை” - ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி.. பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

அதிகாலை 4 மணியளவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மகன் சுபாஷையும், தடுக்க முயன்ற கண்ணம்மாளையும் தண்டபாணி அரிவாளால் வெட்டிக்...
“தமிழ்நாட்டையே உலுக்கிய இரட்டை ஆணவ படுகொலை” - ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி.. பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
Published on
Updated on
2 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா அருணபதி கிராமத்தை சேர்ந்தவர் 50 வயதுடைய தண்டபாணி. இவரது மகன் 28 வயதுடைய சுபாஷ் இவர் MBA படித்து முடித்துவிட்டு திருப்பூரில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார். இவரது பெற்றோர்களும் அதே பகுதியில் வீடு எடுத்து தங்கி அருகில் இருந்த பனியன் கம்பனியில் பணிபுரிந்து வந்திருக்கின்றனர். அப்போது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கொல்லாபுரத்தை சேர்ந்த 25 வயதுடைய அனுசுயா என்பவருடன் சுபாஷிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் இருவரும் காதலித்து வந்த நிலையில் சுபாஷின் தந்தை தண்டபாணி அவரது மகனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறார். மேலும் மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டால் நம்மை யாரும் மதிக்க மாட்டார்கள் என மிரட்டியிருக்கிறார். எனவே சுபாஷ் கடந்த (27.03.2023) அன்று அனுசுயாவை திருமணம் செய்தார். இந்த திருமண விவகாரம் சுபாஷின் தந்தை தண்டபாணிக்கு தெரிய வர எதிர்ப்பு தெரிவித்தார். அதே நேரத்தில் சுபாஷின் பாட்டியான 65 வயதுடைய கண்ணம்மாள் இந்த திருமணத்திற்கு ஆதரவு தெரிவித்தார். இந்த நிலையில் திருமணம் செய்த புதுமண ஜோடியை தண்டபாணி அவர் சொந்த ஊரான அருணபதிக்கு அழைத்தார்.

இதன் காரணமாக கடந்த (14.04.2023) தமிழ் புத்தாண்டு அன்று புதுமண ஜோடிகள் அருணபதிக்கு வந்தனர். அன்று இரவு அங்கு அவர்கள் தங்கிய நிலையில் தண்டபாணியை கண்ணம்மாள் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் அதை தண்டபாணி ஏற்கவில்லை. இந்த நிலையில் (15.04.2023) அன்று அதிகாலை 4 மணியளவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மகன் சுபாஷையும், தடுக்க முயன்ற கண்ணம்மாளையும் தண்டபாணி அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார்.

இந்த சம்பவத்தில் தப்பி ஓட முயன்ற மருமகள் அனுசுயாவையும் சரமாரியாக வெட்டினார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார். இந்த கொலை தொடர்பாக ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்டபாணியை கைது செய்தனர். அவர் மீது கொலை, கொலை முயற்சி, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கிருஷ்ணகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி திருமதி.லதா இரண்டு வருடத்திற்கு பிறகு இந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட தண்டபாணிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தும் 8 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

ஆணவக்கொலைக்கு எதிராக வழங்கப்பட்ட இந்த தீர்ப்பை அடுத்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கத்தினர் கிருஷ்ணகிரி அண்ணா சிலை எதிரே பட்டாசு வெடித்து தீர்ப்பை வரவேற்றனர். மேலும் இது குறித்து அனுசியா “இந்த வழக்கில் தீர்ப்பு கிடைத்தது எங்களுக்கான தீர்ப்பு மட்டும் கிடையாது இதுபோல பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கிடைத்த தீர்ப்பு, இனிமேல் ஆணவப் படுகொலை செய்ய வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது ஒரு தடையாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com