
நாமக்கல் | கொல்லிமலை பகுதியை சேர்ந்த பழனிசாமி மகன் சதீஷ்குமார் 25, இவர் ஏற்காடு மாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பானுமதி என்பவரை திருமணம் செய்து கொண்டு அதே கிராமத்தில் வசித்து வருகிறார். ஜேசிபி ஓட்டுனராக இவர் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியை சேர்ந்த காளி என்பவரின் மகனாகிய சிவகுமார் என்பவருக்கு சொந்தமான ஜேசிபி வாகனத்தில் ஓட்டுனர் வேலை செய்து வருகிறார்.
இவர் கடந்த சில நாட்களாக மாரமங்கலம் கிராமத்தில் நடைபெற்று வரும் அரசு பள்ளி கட்டும் கட்டுமான பணியில் ஜேசிபி வாகனம் ஓட்டி வருகிறார். இந்த நிலையில் இன்று காலை மாரமங்கலம் பொன்னுசாமி மகன் செந்தில் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு அருகில் ஜேசிபி வாகனத்தை நிறுத்தி வாகனத்தில் மண் வாரும் பக்கெட் மூலம் கிணற்றில் உள்ள நீரை எடுக்க முயற்சித்துள்ளார்.
அப்போது கிணற்றின் ஓரத்தில் இருந்த கல்லுக்கட்டு சரிந்ததில் வாகனம் கிணற்றுக்குள் கவிழ்ந்து விட்டது. அந்த வாகனத்தில் சதீஷ்குமார் உடன் மாரமங்கலம் பகுதியை சேர்ந்த காளி மகன் கரிய மலை,63. என்பவரும் உடன் இருந்துள்ளார்.
வாகனம் கிணற்றில் விழுந்ததும் சதீஷ்குமாருக்கு நீச்சல் தெரிந்ததால் கிணற்றிற்கு மேலே வந்து விட்டார். கரிய மலை ஜேசிபி வாகனத்தின் அடியில் மாட்டிக் கொண்டதால் மேலே வர முடியாமல் கிணற்றுக்குள்ளே மாட்டிக் கொண்டுள்ளார்.
அப்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காவல் நிலையத்திற்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துவிட்டு கரியமலையை மீட்க முயற்சித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் பொதுமக்கள் உதவியுடன் கரியமலையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
கிணற்றுக்கு அடியில் அதிகப்படியான சேர் இருந்தால் கரியமலையை மீட்க சிரமப்பட்டனர். அதன் பின்னர் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கரி மலையை இறந்த நிலையில் கிணற்றை விட்டு மேல் எடுத்தனர்.
பின்னர் ஏற்காடு காவல்துறையினர் கரியமலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து ஏற்காடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | வேகத்தால் மக்கள் உயிரிழந்த சோகம்...