
சென்னையின் அடையாளம் மெரினா
எந்த ஊரை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, சென்னை என்றவுடன் அனைவரின் நினைவிற்கும் வருதுவது மெரினா கடற்கரை தான். சென்னைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முதலில் போக விரும்பும் இடம் மெரினா பீச். வங்காள விரிகுடாவில் சென்னையில் இருக்கும் மெரினா கடற்கரை, உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை என்ற பெருமைக்குரியது.
பொதுவாக குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு இடம் தான் கடற்கரை. அதுவும் சென்னையில் வசிக்கும் மக்களுக்கு சந்தோசம் என்றாலும் சரி, கவலை என்றாலும் சரி, எங்கேயாவது போகலாம் என்று நினைக்கும் போது எல்லோரின் மனதிலும் தோன்றும் இடம் தான் மெரினா கடற்கரை.
மெரினாவும் மக்களும்
பலூனுடன் விளையாடும் குழந்தைகள், ராட்டினம் சுற்றும் சிறுவர்கள், துப்பாக்கி சுடும் இளைஞர்கள், கடல் அலையில் கால் நனைத்து சிலாகிக்கும் கல்லூரிப் பெண்கள், கால்பந்து விளையாடும் நண்பர்கள், காதலர்களிடம் சென்று பூ வாங்க சொல்லும் பூக்கார அம்மா, பல நாள் பழகியதை போல் கிண்டலடித்து பேசி போகும் திருநங்கை அக்காக்கள் என பலதரப்பட்ட மக்களை இணைக்கும் ஒரே இடம் மெரினா கடற்கரை.
இயற்கையின் அதிசயம் இந்த கடல்
இன்பத்தை இரட்டிப்பாக்கவும், துன்பத்தை துடைத்தெறியவும் நம் கால்கள் தொட்டு விளையாடும் கடல் அலைக்கு மட்டுமே சாத்தியம். நிலம், நீர், ஆகாயம், இம்மூன்றையும் ஒரு சேர பார்த்து லயித்து, வியந்து போக வைக்கும் இயற்கையின் அதிசயப் படைப்பே இந்த கடல்.
இனி அந்த வருத்தம் தேவையில்லை
இயற்கையின் எந்த பாதகத்திற்கும் ஆளாகாத ஒரு மனிதன், தான் நினைக்கும் பொழுதெல்லாம் கடற்கரைக்கு சென்று மனம் மகிழலாம், ஆனால் இயற்கையின் பிழையால் மாற்றுத்திறனாளிகளாக பிறந்தவர்களில் எத்தனையோ பேர் இன்றளவும் கடல் அலையில் கால் நனைத்ததில்லை.
இதுவரை எப்படியோ ஆனால் அந்த வருத்தம் இனி தேவையில்லை. மாற்றுத்திறனாளிகளும் கடற்கரைக்கு சென்று கடலலையில் கால் நனைத்து விளையாடி மகிழ முடியும். அதற்கான ஏற்பாடுகளை மிக சிறப்பாக செய்துள்ளது சென்னை மாநகராட்சி.
தற்காலிக பாதை அமைத்த மாநகராட்சி
கடந்த வருடம் டிசம்பர் 28ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக தற்காலிக பாதை அமைக்கப்பட்டிருந்தது. அவர்கள் கடல் அலையை கண்டுகளிக்க மெரினாவில் தற்காலிக பாதையை சேப்பாக்கம் திருநெல்வேலி கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அன்று திறந்து வைத்தார்.
இதைப் பற்றி அப்போதுப் பேசிய மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மாற்று திறனாளிகளுக்கான இந்த தற்காலிக பாதை மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மாற்று திறனாளிகள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர், எனவே பின்னாளில் அவர்களுகென்று நிரந்தர பாதை அமைத்து தரப்படும் என்று கூறியிருந்தார்.
ஆனந்தக் கண்ணீரில் மாற்று திறனாளிகள்
கடந்த டிசம்பரில் தற்காலிக பாதையின் மூலம் மாற்று திறனாளிகள் பலர் மெரினா கடற்கரைக்கு வந்து கடல் அலையில் கால் நனைத்து விளையாடி மகிழ்ந்தனர். அப்போது முதன்முதலாக கடல் அலையில் கால் வைத்த மாற்று திறனாளிகள் சிலர் தங்களின் அனுபவத்தை கண்களில் நீர் தழும்ப உணர்வுபூர்வமாக பகிர்ந்தனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கு நிரந்தர நடைபாதை
சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான நிரந்தர நடைபாதை நாளை திறக்கப்பட உள்ளது. சென்னை மெரினா கடற்கரை மணல் பரப்பில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் கடல் அழகை ரசிக்கும் வகையில் சிறப்பு நடைபாதை வசதி சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.
கடற்கரை மணல் பரப்பில் அமைக்கப்பட்ட இந்த நடைபாதையில் மாற்றுதிறனாளிகள், முதியோர்கள் வீல்சேருடன் சென்று கடல் அலையை ரசிக்க கடற்கரை ஒழுங்கு முறை ஆணையம் சிறப்பு அனுமதி அளித்துள்ளது.
மரப்பலகை நடைபாதை
இந்த சிறப்பு நடைபாதை 380 மீட்டர் நீளம், 3 மீட்டர் அகலத்தில் மரத்தினால் அமைக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரை சாலை விவேகானந்தர் இல்லம் எதிரே மணல் பரப்பில் மரப்பலகையால் இந்த சிறப்பு நடைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
ரூ.1.09 கோடி செலவில் இந்த நடைபாதை அமைக்கப்பட்டுள்ள நிலையில், நாளை இந்த சிறப்பு நடைபாதை வசதி திறக்கப்படுகிறது. இந்த நடைபாதை வழியாக செல்லும் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் கடல் அழகை ரசிப்பதற்காக 4 சிறப்பு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
- அறிவுமதி அன்பரசன்