காரைக்கால் தனியார் துறைமுகத்தை அதானி குழுமத்திற்கு வழங்கியதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சிக்காகவும் காரைக்கால் மக்களின் வேலை வாய்ப்பிற்காகவும் காரைக்காலில் தனியார் துறைமுகம் கடந்த 2009 ஆம் ஆண்டு துவங்கி செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்தத் துறைமுகத்தை அதானி நிறுவனத்திற்கு வழங்கியதை கண்டித்தும், காரைக்கால் பகுதியில் வளத்தை சுரண்டி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி, லாபம் ஈட்டுவதற்கு அதன் அனுமதி அளிப்பதை எதிர்த்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், துறைமுக முகப்பில் நடைபெற்றது. மாநில செயலாளர் சலீம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராகவும், துறைமுகத்தை அதானிக்கு வழங்கியதை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்தின் போது செய்தியாளரிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சலீம் காரைக்காலில் செயல்பட்டு வரக்கூடிய துறைமுகம் ஏற்கனவே மார்க் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் தற்போது முறைகேடான முறையில் அதானி நிறுவனத்திற்கு தாரைவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனை கண்டித்தும் புதுச்சேரி ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் பிஜேபி அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவதாகவும் கூறினார்.
மேலும் இந்த துறைமுகம் மூலம் அதானி நிறுவனம் பல கோடி ரூபாயை அல்ல போவதாகவும், இறக்குமதி செய்யப்படும் பொருட்களை, நாகூர் ரயில் பாதை, தற்போது புதிதாக அமைய உள்ள பேரளம் ரயில் பாதை, நவம்பர் மாதம் நிறைவு பெற உள்ள விழுப்புரம் நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை, காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து, நாகப்பட்டினத்தில் அமைய உள்ள பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் இதை எல்லாம் கருத்தில் கொண்டே அதானி நிறுவனம் முறைகேடான முறையில் மார்க் நிறுவனத்திடமிருந்து இந்த துறைமுகத்தை கைப்பற்றி இருப்பதாகவும் இதற்கு முழுமையாக மத்திய அரசு துணை போவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் இந்த துறைமுகத்தில் காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வேலை வழங்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். போராட்டத்திற்கு பின்னர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து அனைத்து கோரிக்கைகளையும் முன்வைத்து மனு அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.