பவானிசாகர் அணையில் ரசாயன கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த கோரி அரசு கவனத்தை ஈர்க்க சுமார் ஆயிரக்கணக்கானோர் பவானிசாகர் பேருந்து நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய மண்ணாலான அணை என்ற பெருமை கொண்டது. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சுமார் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் ஈரோடு மாவட்டத்திற்கு முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதியில் உள்ள ஆலைகளில் இருந்து திறந்து விடப்படும் ரசாயன கழிவு நீர் பவானிசாகர் அணையில் கலந்து அணையில் உள்ள நீர் கருப்பு நிறத்தில் மாறி உள்ளது.
இதனால் பவானிசாகர் அணையில் இருந்து விவசாயத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் திறந்து விடப்படும் தண்ணீரின் மூலம் விவசாய பயிர்கள் நாசமாகுவதாகவும், மேலும் இந்த பவானி ஆற்று குடிநீரை பருகும் பொதுமக்களுக்கு பல்வேறு வியாதிகள் ஏற்படுவதாகவும் கூறி உடனடியாக ரசாயன கழிவு நீரை பவானி ஆற்றில் திறந்து விடும் ஆலைகளை கண்காணித்து அந்த ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இருப்பினும் அதில் எந்தவொரு பலனும் இல்லாததால் பவானி நதிநீரை பாதுகாக்க பல்வேறு கட்சியினர், விவசாயிகள், தன்னார்வலர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் இணைந்து பவானி நதிநீர் பாதுகாப்பு குழு என்ற குழுவை உருவாக்கி அரசு கவனத்தை ஈர்க்க இன்று போராட்டம் நடத்த முடிவு செய்து கடந்த ஒரு மாதங்களாக பொதுமக்கள் மற்றும் அனைத்து சங்கத்தினர், தன்னார்வலர்கள் ஆகியோர்களுக்கு அழைப்பு விடுத்து துண்டு பிரசுரம் வழங்கி வந்தனர்.
அதன் அடிப்படையில் அரசியல் கட்சியினர், விவசாயிகள், தன்னார்வல அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் சுற்றுச்சூழல் தினமான இன்று பவானிசாகர் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க ஏ.எஸ்.பி ஐமன் ஜமால் தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க:"ஓரிரு நாளில் தெளிவான பதில் கிடைக்கும்" உதயநிதி!