புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் அருகே உள்ள கீழப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அமரேசன். இவரது மகனான 17 வயதுடைய சிலம்பரசன் புதுக்கோட்டை மாவட்டம் வம்பனில் உள்ள வேளாண்மை கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவன் சிலம்பரசனுக்கு வேளாண்மை கல்லூரியில் பயில விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே கடந்த மூன்றாம் தேதி சிலம்பரசன் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற நிலையில் பின்னர் கல்லூரிக்கு செல்லாமல் மீண்டும் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அவரது தந்தை அமரேசன் சிலம்பரசனை வேளாண்மை கல்லூரியில் தான் படிக்க வேண்டும், என்று கண்டித்து பின்னர் வேளாண்மை கல்லூரிக்கு அழைத்துச் சென்று கல்லூரியில் விட்டுவிட்டு பின்னர் மீண்டும் மாலை வீட்டிற்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் சிலம்பரசனிடம் இருந்த மொபைல் ஃபோனையும் அவரது தந்தை அமரேசன் பிடுங்கி வைத்ததாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே வேளாண்மை கல்லூரியில் படிக்க விருப்பமில்லாமல் இருந்த சிலம்பரசன் அவர் பயன்படுத்தும் செல்போனையும் அவரது தந்தை பிடுங்கி வைத்துக் கொண்டதால் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில் தான் சிலம்பரசன் வீட்டிற்கு அருகாமையில் உள்ள பன்னீர் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் சடலமாக கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதியினர் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற பெற்றோர் சிலம்பரசன் உடல் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினரும் மழையூர் காவல்துறையினரும் சென்ற நிலையில் கிணற்றில் சடலமாக கிடந்த சிலம்பரசனின் உடலை தீயனைப்புத் துறையினர் மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இதனை தொடர்ந்து அந்த சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் மாணவன் சிலம்பரசன் வேளாண்மை கல்லூரியில் படிக்க விருப்பம் இல்லாமல் இருந்த நிலையில் தொடர்ந்து அதே கல்லூரியில் படிக்க வேண்டும் என்று அவரது தந்தை வற்புறுத்தியதாலும் அவரது மொபைல் ஃபோனை பிடுங்கி வைத்துக் கொண்டதாலும் மன உளைச்சல் ஏற்பட்டு சிலம்பரசன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் சிலம்பரசனின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மழையூர் போலீசார் அனுப்பி வைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.