

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த கொங்குப்பட்டியை சேர்ந்தவர் ராமு. இவர் அதே பகுதியில் சொந்தமாக துணி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் பக்கத்து ஊரை சேர்ந்த பிரியா என்பவருக்கு கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பிரியா தனது கணவர் கடையை விட்டு விட்டு அதே பகுதியில் உள்ள மற்றொரு அழகு நிலையத்தில் வேலை புரிந்து வந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது அப்பகுதியில் உள்ள சிமெண்ட் கடையில் பணிபுரியும் ஹரிஷ்குமார் என்பவருடன் பிரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களுக்கு இடையேயான பழக்கம் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. இதனை தொடர்ந்து இருவரும் அவ்வப்போது வெளியில் ஊர் சுற்றி வந்த நிலையில் இது குறித்து தகவல் அறிந்து ப்ரியாவின் குடும்பத்தினர் அவரை கண்டித்திருக்கின்றனர். இருப்பினும் ஹரிஷுடன் தொடர்ந்து பழகி வந்த பிரியா கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது காதலனுடன் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து ஊட்டியில் திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
பிரியாவை காணவில்லை என அவரது கணவர் மற்றும் உறவினர்கள் தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் ஓமலூர் மகளிர் காவல் நிலையத்தில் பிரியா மற்றும் அவரது காதலர் ஹரிஷ்குமார் தஞ்சமடைந்தனர். இந்த தகவல் அறிந்து அங்கு வந்த கணவர் ராமு மற்றும் அவரது உறவினர்கள், காவல் நிலையத்திற்குள் புகுந்து, பிரியாவை தாக்க முற்பட்டனர். அவர்களை மகளிர் போலீஸார் சமாதானப்படுத்தி வெளியேற்றினர். மேலும் இதனை தொடர்ந்து வளாகத்தில் காதலன் வீட்டாரை ஒரு கும்பல் கடுமையாக தாக்கியது. அவர்களை விரட்டிய போலீசார், விசாரணை நடத்தினர்.
அப்போது பிரியா “இதுவரை எனக்கும் ராமுவிற்கும் திருமணமாகி 3 ஆண்டுகளாகியும் எனது கணவர் என்னுடன் குடும்பம் நடத்தவில்லை. அதனால், எனது வாழ்க்கையை தேர்வு செய்து கொண்டேன். எனவே என்னை காதல் கணவர் ஹரிஷ்குமாருடன் அனுப்பி வைத்துவிடுங்கள்” என தெரிவித்தார். அதற்கு போலீசார் ராமுவை விவாகரத்து செய்யாமல் ஹரிஷ் குமாருடன் வாழ்வது சட்டப்படி தவறு என கூறி ப்ரியாவை அவரது பெற்றோர்களுடன் அனுப்பிவைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.