அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட பாரதிராஜா உடல்.. தேனியில் நிரந்தரமாக உறங்கும் இயக்குனர் இமயம்!

இறுதியாக வீட்டில் மருத்துவ கண்காணிப்பில் இருந்தபோது உயிரிழந்தார்...
அரசு மரியாதையுடன் நல்லடக்கம் 
செய்யப்பட்ட பாரதிராஜா உடல்.. தேனியில் நிரந்தரமாக 
உறங்கும் இயக்குனர் இமயம்!
Published on
Updated on
2 min read

தமிழ் சினிமாவை கிராமிய மண்வாசனையுடன் உலக அரங்கிற்கு கொண்டு சென்ற முன்னணி இயக்குநர் இமயம் பாரதிராஜா நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவு தமிழ் திரைப்படத் துறையினரையும், ரசிகர்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாரதிராஜா, 1977-ஆம் ஆண்டு வெளியான ‘16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்த ஒரே படம் தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியமைத்தது. ஸ்டூடியோவிற்குள் மட்டுமே சிக்கியிருந்த திரைப்படங்களை கிராமங்களின் இயற்கை சூழலுக்குள் கொண்டு வந்து, புதிய திரைப்பட மொழியை உருவாக்கிய பெருமை அவரையே சாரும்.

அதனைத் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, மண் வாசனை, வேதம் புதிது, முதல் மரியாதை, கருத்தம்மா, பசும்பொன், பொம்மலாட்டம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை அவர் வழங்கினார். சமூக அக்கறை, கிராமிய வாழ்க்கை, மனித உணர்வுகள் மற்றும் காதலை மையமாகக் கொண்ட அவரது படைப்புகள் தமிழ் சினிமாவில் தனித்துவமான இடத்தைப் பெற்றன. திரைப்படத் துறையில் அவரது சிறப்பான பங்களிப்பிற்காக 6 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 2004-ஆம் ஆண்டு இந்திய அரசின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார். இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தன்னை நிரூபித்த அவர், சமீப காலங்களிலும் திரைப்படங்களில் நடித்துவந்தார். 2025-ஆம் ஆண்டு வெளியான ‘நிறம் மாறும் உலகில்’ திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்பட்டு வந்த அவர், மகன் மனோஜின் மறைவுக்குப் பிறகு மனரீதியாகவும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மலேசியாவில் உள்ள மகளின் வீட்டில் சில மாதங்கள் தங்கியிருந்த அவர் பின்னர் சென்னை திரும்பி தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இறுதியாக வீட்டில் மருத்துவ கண்காணிப்பில் இருந்தபோது உயிரிழந்தார். தமிழ் சினிமாவிற்கு ராதிகா சரத்குமார், ராதா, ரேவதி, கார்த்திக் உள்ளிட்ட பல முன்னணி கலைஞர்களை அறிமுகப்படுத்தியதுடன், பலரின் திரையுலகப் பயணத்திற்கும் வழிகாட்டியாக இருந்தார். அவரது படைப்புகள் தலைமுறைகளை கடந்தும் ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கும்.

இந்நிலையில், அவரது உடல் சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு இன்று காலை கொண்டு வரப்பட்ட நிலையில் அங்கு பொதுமக்கள், திரைத்துறையினர் மற்றும் அரசியல்வாதிகள் அஞ்சலி செலுத்தி வந்தனர். தொடர்ந்து முதலமைச்சர் விஜய் கூறியபடி அவரது உடல் அரசு மரியாதையுடன் குண்டுகள் முழங்க அவரது சொந்த கிராமமான தேனீயின் உள்ள பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் பொற்காலத்தை உருவாக்கிய ஒரு மகத்தான இயக்குநரின் பிரிவு, திரைத்துறைக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த கலாசார உலகிற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாக மாறியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com