
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு, அருகே உள்ள மாரம்பாடியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இதனிடையே பள்ளியில் இன்று காலை சத்துணவு சமைப்பதற்காக தண்ணீர் இல்லாததால், பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலரை சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம், சைக்கிளில் சென்று தண்ணீர் எடுத்து வருமாறு பள்ளி தலைமை ஆசிரியர் கூறியுள்ளார்.
இதனை அடுத்து சைக்கிளில் சென்ற மாணவர்கள் ஒவ்வொருவரும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சென்று இரண்டு குடங்களை கயிறு கட்டி கேரியரில் வைத்து, பள்ளியை நோக்கி கொண்டு வந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் சைக்கிளில் தண்ணீர் எடுத்து வந்த சிறுவன் ஒருவன் கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இப்படி பள்ளிக்கு கல்வி பயில வரக்கூடிய மாணவர்களை தண்ணீர் எடுக்க பயன்படுத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ள நிலையில், மாணவர்களின் உயிருக்கு யார் பாதுகாப்பு கொடுப்பார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்