தேனி மாவட்டத்தை சேர்ந்த ஜெயபாண்டி என்கிற பெண், அதே ஊரில் அங்கன்வாடி பணியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு அப்போது மாவட்ட திட்ட அலுவலராக இருந்த ராஜராஜேஸ்வரி என்பவரின் வீட்டில், அவரின் உத்தரவின் பேரில் பணி பெண்ணாக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் ராஜேஸ்வரி சென்னைக்கு பணியிட மாறுதல் ஆகிய பின்பு, தேனியில் படித்து வரும் தனது மகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என ஜெயபாண்டியிடம் கூறியிருக்கிறார்,ஆனால் ஜெயபாண்டி மறுத்துள்ளார்.
இதையடுத்து மீண்டும், தேனி மாவட்டத்திற்கு பணியிட மாறுதலாகி வந்த ராஜராஜேஸ்வரி தனது வீட்டில் பணி செய்ய வேண்டும் என ஜெயபாண்டியை அழைத்துள்ளார். தனது குடும்ப சூழ்நிலை காரணமாக ஜெயபாண்டி மறுத்துள்ளார். இதனால் ஜெயபாண்டிக்கு தொடர்ந்து பல்வேறு இடையூறு செய்து வந்துள்ளார் ராஜேஸ்வரி.
மேலும் தனது பணியை செய்ய விடாமல் வேறு பகுதிக்கு பணியிட மாற்றம் செய்து தன்னை தொடர்ந்து இடையூறு செய்து வந்ததாகவும், ராஜராஜேஸ்வரிக்கு தான் கொலை மிரட்டல் விடுத்ததாக பொய் புகார் அளித்ததாகவும் ,இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிய ஜெயபாண்டி, இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் ராஜேஸ்வரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனுவை அளிக்க வந்தார்.
புகார் மனுவை கொடுத்த பின்பு திடீரென விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற ஜெயபாண்டியை போலீசார் கூட்ட அரங்கில் இருந்து வெளியே அழைத்து வந்து அமர வைத்தனர். விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஆம்புலன்ஸ் இல்லாததால் உயிருக்கு போராடிய அந்த பெண்ணை சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் கூட்ட அரங்கிற்கு வெளியே அமர வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் ஆட்டோவில் அந்தப் பெண்ணை போலீசார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.
இந்நிலையில் தற்கொலைக்கு முயன்ற பெண் கொடுத்த புகார் மனுவில் இந்த கடிதம் உங்களிடம் கிடைக்கும் போது நான் உயிரோடு இருக்க மாட்டேன், என்றும் அரசு அலுவலர் ராஜராஜேஸ்வரி மீது உரிய நடவடிக்கை எடுத்தும், ஆதரவற்ற நிலையில் இருக்கும் தனது இரு குழந்தைகளையும் பாதுகாக்க கோரியும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்