“தொப்புள் கொடியுடன் சாலை ஓரத்தில் வீசப்பட்ட குழந்தை” - அதிகாலையில் காத்திருந்த அதிர்ச்சி… தீவிர விசாரணையில் போலீசார்!

தொப்புள் கொடியை கூட அகற்றாமல் குழந்தை வீசி சென்று இருப்பதால் குழந்தை பிறந்து சில மணி நேரங்கள்...
“தொப்புள் கொடியுடன் சாலை ஓரத்தில் வீசப்பட்ட குழந்தை” - அதிகாலையில் காத்திருந்த அதிர்ச்சி… தீவிர விசாரணையில் போலீசார்!
Admin
Published on
Updated on
1 min read

திருமணமான பல தம்பதிகள் குழந்தை இல்லாமல் ஏங்கி செயற்கை கருத்தரிப்பிற்காக லட்சக்கணக்கில் செலவு செய்தும் பலன் கிடைக்காமல் கவலையில் வாடும் நிலையில் சிலர் பிறந்த குழந்தையை குப்பை தொட்டியில், சாலையோரங்களில் வீசி செல்லும் சம்பவம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. அதே போல ஒரு சம்பவம் தான் இன்று தேனியில் நடைபெற்றுள்ளது.

தேனி அருகே வீரபாண்டியில் இன்று அதிகாலையில் நடைபயிற்சி சென்ற நபர்கள் சிலர் சாலையின் ஓரத்தில் பச்சிளம் குழந்தை இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சுகாதார அலுவலர்கள் ஆகியோர் பரிசோதித்த போது குழந்தை உயிரிழந்த நிலையில் இருந்தது தெரிவந்துள்ளது. அதனை தொடர்ந்து குழந்தையின் உடலை கைப்பற்றிய போலீசார் ஆம்புலன்ஸ் வரவழைத்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்ட வரும் நிலையில் தொப்புள் கொடியை கூட அகற்றாமல் குழந்தை வீசி சென்று இருப்பதால் குழந்தை பிறந்து சில மணி நேரங்கள் மட்டுமே ஆகியிருக்கும் என தெரிவித்துள்ளனர். மேலும் சாலையில் வீசி செல்லப்பட்ட குழந்தை ஆண் குழந்தை என்றும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வீரபாண்டி போலீசார் காலை நேரத்தில் நடைபயிற்சி சென்ற நபர்களிடமும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும் வருகின்றனர்

மேலும் பிறந்த சில மணி நேரங்களே ஆன குழந்தையை எதற்காக தூக்கி வீசி சென்றார்கள், குழந்தையை பெற்றெடுத்த தாயின் நிலை என்ன என்பது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் குழந்தை இறந்து பிறந்ததால் இவ்வாறு செய்தார்களா? அல்லது ஏதேனும் தகாத உறவில் பிறந்த குழந்தை என்பதால் சாலை ஓரத்தில் வீசி சென்றார்கள்? என பல்வேறு கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றார். வீரபாண்டி பகுதியில் அதிகாலையில் பிறந்த குழந்தையை சாலை ஓரத்தில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com