தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு அருகே உள்ள கோவில்பாறை கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் - கிருஷ்ணசெல்வி என்ற தம்பதிக்கு ஜெய கிருத்திகா என்ற மகள் உள்ளார். மாற்றுத்திறனாளியான செந்தில்குமார் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக வேலை செய்து வந்தார்.
இவருடைய மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில், செந்தில்குமார் தனது மகள் ஜெய கிருத்திகாவை வளர்த்து வந்தார். ஜெய கிருத்திகா கடமலைக்குண்டு கிராமத்தில் செயல்படும் ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று இரவு செந்தில்குமார் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
தந்தை இறந்த சோகத்தை மனதில் வைத்துக்கொண்டு, இன்று நடைபெற்ற பத்தாம் வகுப்பு அறிவியல் பொதுத் தேர்வில் ஜெயகிருத்திகா பங்கேற்று தேர்வு எழுதிவிட்டு மீண்டும் தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்றார். இந்த சம்பவம் கோவில்பாறை கிராம மக்கள் இடையே பெரும் நெகிழ்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்