‘கொத்தடிமை’ போல் நடத்தப்பட்டார்களா நரிக்குறவர் மக்கள்? – “வாகனங்களை அடித்து நொறுக்குவோம்” - காவல்துறை மிரட்டும் வீடியோவால் சர்ச்சை!

இந்த சர்ச்சைக்குரிய விசாரணை தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கோவில்பட்டி
Published on: 
Updated on: 
1 min read

கோவில்பட்டி அருகே நரிக்குறவர் காலனியில் மக்களை கொத்தடிமைகள் போல அமர வைத்து, கம்பைக் காட்டி மிரட்டி சர்ச்சைக்குரிய வகையில் விசாரணை நடத்தியதாக ஆய்வாளர் மீது குற்றச்சாட்டு. 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு கிராமத்தில் உள்ள ராஜகோபால் நகரில் அமைந்துள்ள நரிக்குறவர் காலனியில், தீபாவளி அன்று இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியுள்ளது. இதில், அந்தப் பகுதியைச் சேர்ந்த மூக்கையா, கணேசன், சரவணன், மாரி ஆகியோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மூக்கையா மட்டும் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி, இந்தச் சம்பவம் தொடர்பாக மாவீரன், ரவி, குமார் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் மாவீரன், ரவி ஆகிய இருவரையும் கைது செய்து, குமாரை தேடி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சம்பவத்தன்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வானுமாமலை அங்கு சென்று விசாரணை நடத்திய விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள மக்களை கொத்தடிமைகள் போலத் தரையில் அமர வைத்து, கையில் கம்பை வைத்துக் கொண்டு விசாரணை நடத்தியதுடன், அவர்களைக் கம்பால் தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

மேலும், அவருடன் சென்ற உதவி ஆய்வாளர் நீலகண்டன், "உங்களிடம் ஓயாமல் பேசிக் கொண்டிருக்க முடியாது. நீங்கள் தொழிலுக்குச் செல்ல முடியாது. வாகனங்களை அடித்து நொறுக்கிவிடுவோம்" என்று கூறியதாக தெரிகிறது. இந்த சர்ச்சைக்குரிய விசாரணை தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவரை இழந்த பெண் ஒருவர் அளித்த புகார் மீது விசாரணை நடத்தாமல் காலம் தாழ்த்தியதாகக் கூறி, கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வானுமாமலைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று ரூ.5,000 அபராதம் விதித்திருந்தது. மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனத் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது நரிக்குறவர் காலனியில் ஆய்வாளர் நடத்தியதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய விசாரணை வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.