தந்தை மகன் இறப்பு; "நீட் தேர்வு அனைத்து வழிகளிலும் தோல்வியடைந்து விட்டது" அன்புமணி குற்றச்சாட்டு!

தந்தை மகன் இறப்பு; "நீட் தேர்வு அனைத்து வழிகளிலும் தோல்வியடைந்து விட்டது" அன்புமணி குற்றச்சாட்டு!
Published on
Updated on
2 min read

நீட்தேர்வு அனைத்து வழிகளிலும் தோல்வியடைந்து விட்டது என பாமக தலைவர் அன்புமனி இராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.   

சென்னை, குரோம்பேட்டை, குறிஞ்சி நகரைச் சேர்ந்த புகைப்படக்காரர் செல்வசேகரின் மகன் ஜெகதீஸ்வரன், கடந்த 2022-ஆம் ஆண்டு பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற போதிலும், போதுமான மதிப்பெண்களை பெறாததால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை. அதனால், மூன்றாவது முறையாக  நீட் தேர்வு எழுதும் நோக்கத்துடன் தனிப்பயிற்சி வகுப்புகளில் சேர்ந்திருக்கிறார். அவருடன் பயின்ற மாணவர்களில் சிலர் தனியார் கல்லூரிகளிலும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் சேர்ந்த நிலையில், தம்மால் மருத்துவப் படிப்பில் சேர முடியாதோ என்ற கவலையில் மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டார். அவர் உயிரிழந்த சோகத்தை தாங்கிக் கொள்ள முடியாமல், அவரது தந்தை செல்வசேகரும் தற்கொலை செய்து கொண்டார். ஏற்கனவே ஜெகதீஸ்வரனின் தாயார் இறந்து விட்ட நிலையில் இப்போது நீட் தேர்வினால் மொத்த குடும்பமும் இல்லாமல் போயுள்ளது.

இந்நிலையில் தந்தை மகன் தற்கொலைக்கு காரணமான நீட் தேர்வை தடை செய்யக்கோரி  பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், நீட் தேர்வால் தந்தையும், மகனும் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக தெரிவித்துள்ளார். 

மேலும், "நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்தே மாணவர்களின் உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கிறது.  இப்போது  மாணவனின் தந்தையையும் பலி வாங்கியிருக்கிறது. தமிழ்நாட்டில்  மட்டும் தான் இந்த நிலை என்று கூற முடியாது. இந்தியா முழுவதும் இதே நிலை தான் காணப்படுகிறது. நீட் பயிற்சி அளிப்பதற்கான சிறந்த  பயிற்சி மையங்களைக் கொண்ட இராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நடப்பாண்டில் மட்டும் 19 மாணவர்கள்  நீட் தேர்வு குறித்த அச்சம் மற்றும் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வெளிமாநிலம் சென்று பணம் செலுத்தி பயிற்சி பெறும் வசதி படைத்தவர்களுக்கே இது தான் நிலை என்றால், சாதாரணமான கிராமப்புற ஏழை மாணவர்களின் நிலை எவ்வளவு மோசமானதாக இருக்கும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய, தற்கொலை உணர்வை ஏற்படுத்தக்கூடிய ஒரு தேர்வு,  எந்த வகையில் சமூகத்திற்கு பயன்படக் கூடிய தேர்வாக இருக்க முடியும்?  என கேள்வி எழுப்புயுள்ள அன்புமணி, நீட் தேர்வு அனைத்து வழிகளிலும் தோல்வியடைந்து விட்ட தேர்வு என விமர்சித்துள்ளார். அதை தொடருவதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ள அவர்,  நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில்,  அதனால் ஏற்பட்ட சாதக, பாதகங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அதனடிப்படையில் நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். 

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெறுவதற்கான சட்டம் தமிழக சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டு, ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகி விட்ட நிலையில், அதற்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை எனபதை சுட்டிக்காட்டியுள்ள அவர், அதற்கு தமிழக அரசும் அழுத்தம் கொடுக்கவில்லை எனவும் மாணவர்களின் உயிர்களைக் காப்பதற்காக நீட் விலக்கு சட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கோரியுள்ளார்.  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com