
பின்லாந்து, உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடாக பல ஆண்டுகளாக தரவரிசைப்படுத்தப்பட்டு, தரமான கல்வி மற்றும் பாதுகாப்பான சூழலுக்காக புகழ்பெற்ற ஒரு நாடாகும். இந்த நோர்டிக் நாடு, ஆராய்ச்சி அடிப்படையிலான கற்பித்தல் மற்றும் பயிற்சி முறைகளை வலியுறுத்தும் உலகத்தரம் வாய்ந்த கல்வி முறைக்கு பெயர் பெற்றது. ஆனால், இந்த நாட்டில் படிப்பதற்கு எவ்வளவு செலவாகும்? இந்திய மாணவர்கள் பின்லாந்தில் படிக்க தேவையான செலவுகள், உதவித்தொகைகள், மற்றும் வாழ்க்கைச் செலவுகள் பற்றி பார்க்கலாம்.
பின்லாந்தில், ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் ஐரோப்பிய பொருளாதார பகுதி (EEA) நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பொது பல்கலைக்கழகங்களில் கல்வி இலவசம். ஆனால், இந்திய மாணவர்கள் உள்ளிட்ட EU/EEA-இல் இல்லாத மாணவர்கள், ஆங்கிலத்தில் கற்பிக்கப்படும் இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணங்கள், பல்கலைக்கழகம் மற்றும் பாடப்பிரிவைப் பொறுத்து, ஆண்டுக்கு 8,000 யூரோக்கள் (சுமார் 7.2 லட்சம் ரூபாய்) முதல் 20,000 யூரோக்கள் (சுமார் 18 லட்சம் ரூபாய்) வரை இருக்கும். உதாரணமாக, ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தில் முதுகலை பாடப்பிரிவுகளுக்கு கட்டணம் 12 லட்சம் முதல் 16 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம். ஆனால், நல்ல செய்தி என்னவென்றால், பின்லாந்து பல்கலைக்கழகங்கள் இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகைகளை வழங்குகின்றன, இவை முதல் ஆண்டு கல்விக் கட்டணத்தை முழுவதுமாக அல்லது பகுதியாக ஈடு செய்யலாம். சில பல்கலைக்கழகங்கள் 5,000 யூரோ (சுமார் 4.55 லட்சம் ரூபாய்) இடமாற்ற உதவித்தொகையையும் வழங்குகின்றன.
கல்விக் கட்டணத்தைத் தவிர, வாழ்க்கைச் செலவுகள் இந்திய மாணவர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான அம்சமாகும். பின்லாந்தில் வாழ்க்கைச் செலவு, இந்தியாவை விட சுமார் 237.5% அதிகமாக உள்ளது. மாதவாரியாக, ஒரு மாணவர் 700 முதல் 1,000 யூரோக்கள் (சுமார் 63,000 முதல் 90,000 ரூபாய்) வரை செலவு செய்ய வேண்டியிருக்கும், இது வாழ்க்கை முறை மற்றும் நகரத்தைப் பொறுத்து மாறுபடும். ஹெல்சிங்கி, எஸ்பூ, மற்றும் வந்தா போன்ற தலைநகர பகுதிகள் கொஞ்சம் காஸ்ட்லி ஏரியாஸ். ஆனால் லாபரந்தா, போரி, மற்றும் தம்பெரே போன்ற நகரங்கள் மாணவர்களுக்கு மலிவு விலையில் உள்ளன. இந்தச் செலவுகளில் வாடகை, உணவு, போக்குவரத்து, மற்றும் பிற அத்தியாவசிய செலவுகள் அடங்கும். மாணவர் விடுதிகளில் ஒரு பகிரப்பட்ட அறைக்கு மாதம் 160 முதல் 380 யூரோக்கள் (சுமார் 14,400 முதல் 34,200 ரூபாய்) செலவாகும்.
பின்லாந்தில் படிக்கும் மாணவர்கள் பகுதி நேர வேலை செய்யலாம், இது செலவுகளை ஈடு செய்ய உதவும். மாணவர்கள், படிப்பு காலத்தில் வாரத்திற்கு 25-30 மணி நேரம் வேலை செய்யலாம், மற்றும் விடுமுறை காலங்களில் முழுநேர வேலை செய்யலாம். மணிக்கு 9 முதல் 15 யூரோக்கள் (சுமார் 810 முதல் 1,350 ரூபாய்) வரை சம்பாதிக்க முடியும், ஆனால் மாணவர்கள் முழு செலவுகளையும் வேலை மூலம் ஈடு செய்ய முயற்சிக்கக் கூடாது, ஏனெனில் வேலை கிடைப்பது சவாலாக இருக்கலாம். மேலும், படிப்பு முடிந்த பிறகு, மாணவர்கள் ஒரு வருட காலத்திற்கு வேலை தேடுவதற்காக தங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள், இது தொழில்முறை வாய்ப்புகளை ஆராய உதவுகிறது.
பின்லாந்து பல்கலைக்கழகங்களில் ஆங்கிலத்தில் வழங்கப்படும் பாடப்பிரிவுகள், குறிப்பாக வணிக மேலாண்மை, பொறியியல், தகவல் தொழில்நுட்பம், மற்றும் கணினி அறிவியல் துறைகளில் மிகவும் பிரபலமாக உள்ளன. ஆல்டோ பல்கலைக்கழகம், ஹெல்சிங்கி பல்கலைக்கழகம், துர்கு பல்கலைக்கழகம், மற்றும் ஓலு பல்கலைக்கழகம் ஆகியவை உலகளவில் உயர் தரவரிசையில் உள்ளன. இந்த பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சி மற்றும் நடைமுறை கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. உதாரணமாக, ஆல்டோ பல்கலைக்கழகம் தொழில்நுட்பம், வணிகம், மற்றும் கலைத் துறைகளில் புகழ்பெற்றது, மற்றும் QS உலக தரவரிசையில் 109வது இடத்தில் உள்ளது.
விண்ணப்ப செயல்முறை பொதுவாக ஜனவரி முதல் ஏப்ரல் வரை நடைபெறுகிறது. மாணவர்கள் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, கல்வி ஆவணங்கள், மற்றும் ஆங்கில மொழி திறன் சான்று (IELTS அல்லது TOEFL) ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்களின் மொழிபெயர்ப்பு அதிகாரப்பூர்வமாக சான்றளிக்கப்பட்டிருக்க வேண்டும். மாணவர்கள் குறைந்தபட்சம் 3.0 GPA உடன் வலுவான கல்வி பின்னணியைக் கொண்டிருக்க வேண்டும், குறிப்பாக ஆல்டோ பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களுக்கு. மேலும், விண்ணப்பக் கட்டணம் மற்றும் மருத்துவ காப்பீடு செலவுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
பின்லாந்தில் படிப்பதற்கு மாணவர் விசா (ரெசிடென்ஸ் பெர்மிட்) தேவை. இதற்கு 450 யூரோக்கள் (சுமார் 43,000 ரூபாய்) ஆன்லைன் விண்ணப்பக் கட்டணமாகவும், காகித விண்ணப்பத்திற்கு 550 யூரோக்கள் (சுமார் 52,600 ரூபாய்) செலவாகும். மாணவர்கள் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 6 லட்சம் ரூபாய் Finance Source காண்பிக்க வேண்டும். விசா வெற்றி விகிதம் 95%க்கு மேல் உள்ளது, இது இந்திய மாணவர்களுக்கு ஒரு நம்பிக்கையளிக்கும் அம்சமாகும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.