“தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் இது ஒரு புதிய மைல்கல்லாக இருக்கப்போகிறது”-இது தொழில் துறை அமைச்சர் ராஜாவின் அறிவிப்பு. ஏற்கனவே சமீபத்தில் அவர் அறிவித்த “தொலைநோக்கு மிக்க விண்வெளி கொள்கைக்கு” மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது மாநிலம் முழுவதும் நான்கு புதிய சிப்காட் (SIPCOT - State Industries Promotion Corporation of Tamil Nadu) தொழிற் பூங்காக்கள் அமைக்கும் அறிவிப்பு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு, மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சமச்சீர் தொழில் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அமைச்சரின் அறிவிப்பு படி, வேலூர், கள்ளக்குறிச்சி, சிவகங்கை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இந்த புதிய தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்பட உள்ளன. இந்தத் திட்டங்களின் மொத்த முதலீட்டு மதிப்பு சுமார் ரூ.1,650 கோடி ஆகும். இதுமட்டுமின்றி, இந்த தொழிற்பூங்காக்கள் மூலம் சுமார் 16,000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்புகள் உருவாகும்.
என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, குறிப்பாக இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, இளைஞர்களின் வேலைவாய்ப்புப் பிரச்சினையைத் தீர்க்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா:
வேலூர் மாவட்டம், தோல் மற்றும் காலணி உற்பத்திக்கு பெயர் பெற்றது. இங்கு அமைக்கப்படவுள்ள புதிய சிப்காட் தொழிற்பூங்கா, சுமார் ரூ.500 கோடி முதலீடுகளை ஈர்க்கும் திறன் கொண்டது. இதன் மூலம் சுமார் 2,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டம், வேலூர் மாவட்டத்தின் பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்துவதோடு, இப்பகுதியில் ஏற்கனவே வலுவாக உள்ள தோல் மற்றும் காலணித் தொழில்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும். மேலும், புதிய முதலீடுகள் இப்பகுதிக்கு வருவதன் மூலம், துணைத் தொழில்களும் வளர்ச்சியடையும் வாய்ப்பு உருவாகும்.
கள்ளக்குறிச்சியில் சிப்காட் தொழிற்பூங்கா:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமார் 450 ஏக்கர் பரப்பளவில், ஒரு புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்த தொழிற்பூங்கா ரூ.650 கோடி முதலீடுகளை ஈர்க்கும் ஆற்றல் கொண்டது. இதன் மூலம் சுமார் 9,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி போன்ற வளர்ந்து வரும் மாவட்டத்தில் இத்தகைய பெரிய அளவிலான தொழிற்பூங்கா அமைவது, அப்பகுதி மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும், தனிநபர் வருமான உயர்வுக்காகவும், ஒரு சிறப்பான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் இப்பகுதிக்கு, தொழில்துறை வேலை வாய்ப்புகள் ஒரு மாற்று வருமான ஆதாரமாக அமையும்.
சிவகங்கை மாவட்டத்தில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா:
சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் மற்றொரு சிப்காட் தொழிற்பூங்காவை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த தொழிற்பூங்கா ரூ.200 கோடி முதலீடுகளை ஈர்க்கும் திறன் கொண்டது. இதன் மூலம் சுமார் 2,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என அமைச்சர் டிஆர்பி ராஜா சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம், வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருந்தாலும், தொழில் வளர்ச்சியில் சற்று பின்தங்கியே உள்ளது. இந்த புதிய தொழிற்பூங்கா இப்பகுதியில் புதிய தொழில்களை ஈர்ப்பதோடு, உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும்.
தென்காசியில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா:
தென்காசி மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள, புதிய சிப்காட் தொழிற்பூங்கா ரூ.300 கோடி முதலீடுகளை ஈர்க்கும் திறன் கொண்டது. இதன் மூலம் சுமார் 3,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என அமைச்சர் டிஆர்பி ராஜா சட்டமன்றத்தில் தெரிவித்தார். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம், இயற்கை வளங்கள் நிறைந்த பகுதியாகும்.
இங்கு அமைக்கப்படும் தொழிற்பூங்கா, இப்பகுதியில் உள்ள கனிம வளங்கள் மற்றும் விவசாய விளைபொருட்களை அடிப்படையாகக் கொண்ட தொழில்களை ஈர்க்கும் வாய்ப்புள்ளது. மேலும், சுற்றுலாவை நம்பியுள்ள இப்பகுதிக்கு, புதிய வேலைவாய்ப்புகள் ஒரு கூடுதல் பொருளாதார ஆதாரமாக அமையும்.
அமைச்சர் டிஆர்பி ராஜா மேலும் கூறுகையில், தமிழ்நாடு அரசு 2024-ஆம் ஆண்டு நடத்திய உலக முதலீட்டாளர் மாநாடு (Tamil Nadu Global Investor Meet) ஒரு மகத்தான வெற்றி பெற்றது. இந்தியாவில் உள்ள பிற எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், அந்த மாநாட்டில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்த நிறுவனங்களில் சுமார் 72% நிறுவனங்கள், உண்மையாகவே முதலீட்டு செயல்களைத் தொடங்கி கன்வெர்ஷன் ரேஷியோவில் முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது. இது, தமிழகத்தின் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும், அரசின் சீரிய முயற்சிகளையும் பறைசாற்றுகிறது.
தற்போது தமிழ்நாடு முழுவதும் சிப்காட் வசம் 48,926 ஏக்கர் நிலம் இருப்பு உள்ளது. இந்த நில வங்கி, மாநிலத்தில் தொழிற்பூங்காக்களை மேலும் விரிவாக்கம் செய்வதற்கும், புதிய தொழில்களை ஈர்ப்பதற்கும் ஒரு முக்கிய உந்து சக்தியாக விளங்குகிறது.
இந்த புதிய சிப்காட் தொழிற்பூங்காக்கள், தமிழ்நாடு அரசின் தொலைநோக்கு பார்வையின் வெளிப்பாடாகும். இதன் மூலம் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மேலும் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை மாவட்டங்களில் ரூ.1,650 கோடி முதலீடு ஈர்க்கப்படுவதன் மூலம், அப்பகுதிகளின் உள்ளூர் பொருளாதாரம் மேம்படும். சுமார் 16,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது மட்டுமல்லாமல், இளைஞர்களின் வேலையின்மைப் பிரச்சினைக்கும், ஒரு நிலையான தீர்வு கிடைக்கும்.
இந்த தொழிற்பூங்காக்கள், அந்தந்த பகுதிகளில் உள்ளூர் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளை வலுப்படுத்தி, கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாவட்டங்களுக்கு இடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கவும் உதவும். ஒட்டுமொத்தமாக, இந்த புதிய சிப்காட் தொழிற்பூங்காக்கள் தமிழகத்தின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்