

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், மாணவ, மாணவியர் தீவிரமாக இரவு, பகலாக தங்களை தயார் படுத்தி வருகின்றனர். மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் என அத்தனைபேரையும் இந்த தேர்வு பயம் தொற்றிக் கொள்வதை மறுப்பதற்கில்லை.
ஆனால் எந்த பயமோ, பதட்டமோ இல்லாமல் பொதுத்தேர்வுக்கு நல்ல முறையில் தயாராக மாணவர்களுக்கு சில முக்கியக் குறிப்புகள் இதோ:
1. குறிப்பேடுகள் பயன்படுத்தி படியுங்கள்
ஆண்டு தொடக்கத்தில் இருந்து, ஆசிரியர்கள் பாடம் எடுக்கும் போது, நீங்கள் எடுக்கும் பாடக் குறிப்புகளுக்கான குறிப்பேடுகளை பத்திரமாக எடுத்து வைத்து, அந்த குறிப்பேடுகளை பயன்படுத்தி, முக்கிய குறிப்புகளை மட்டுமே படியுங்கள்.
ஏனென்றால் நீங்கள் தேர்விற்குப் படிக்கும்போது முழு புத்தகத்தையும் ஒரு வரிவிடாமல் படிக்கப்போவதில்லை. ஏற்கனவே எல்லா பாடங்களும் படித்த மற்றும் டெஸ்ட் எழுதிய பாடங்கள்கள்தான். எனவே, குறிப்பேடுகளில் உள்ள முக்கிய குறிப்புகளை மட்டும் படித்தாலே போதும், படிப்பது தெளிவாகவும், விரைவாகவும் புரியும்.
இப்படி இல்லாமல் புத்தகம் முழுவதையும் படித்தால், மொத்தமும் குழம்பி, நன்கு தெரிந்ததும் மறந்து போகும் நிலை உருவாகும். எனவே எது முக்கியமானதோ, அதனை தேர்ந்தெடுத்து, அதை தெளிவாகவும், விரிவாகவும் படியுங்கள்.
2. அர்த்தம் புரிந்து படியுங்கள்
பொதுவாக பாடங்களை முழுமையாக படித்து அதன் மையக் கருத்தை புரிந்து கொள்ள வேண்டும். அப்படி புரிந்து கொண்டால் சொந்தமாக எழுதும் ஆற்றல் வந்துவிடும். புத்தகத்தில் உள்ளதை எழுத்துக்கள் மாறாமல் எழுத வேண்டிய அவசியம் இல்லை. கேட்கப்படும் கேள்விக்கான பதிலை, தெளிவாக எழுதினால் போதுமானது.
அதுமட்டுமின்றி, இப்படி படித்து, புரிந்து எழுதுவதால், மறதி என்ற ஒன்று வருவதற்கு வாய்ப்பில்லை. மனப்பாடம் செய்து எழுதும் போது, ஒரு வார்த்தை மறந்து விட்டால், நம்மால் அடுத்த வரிக்கு செல்லவே முடியாது. அப்படியே தேங்கி நிற்றுவிடுவோம். ஆனால் படித்து, கருப்பொருளை புரிந்து கொண்டு, அந்த கருப்பொருளின் அர்த்தம் மாறாமல் எழுதும் போது, ஒரு வார்த்தையையோ, வரியையோ மறப்பதற்கு வாய்ப்பில்லை. எனவே கூடியவரை அர்த்தம் புரிந்து படியுங்கள், மனப்பாடம் செய்வதை தவிருங்கள்.
ஆனால் அதே நேரம் தமிழ், கணிதம், அறிவியல் போன்ற பாடங்களில் கட்டாயம் மனப்பாடம் செய்ய வேண்டியதும் இருக்கும். அப்போது கட்டாயம் மனப்பாடம் செய்யுங்கள்.
3. திட்டமிட்டு செயல்படுங்கள்
வெற்றியை அடைய இலக்கு அவசியம். ஓர் இலக்கைத் தீர்மானித்தால்தான் அதை நோக்கிப் பயணித்து வெற்றியை அடைய முடியும். பொதுத்தேர்விற்கு முன்பு அதற்குத் தயாராக எத்தனை நாட்கள் உள்ளன, எந்தெந்த பாடங்களுக்கு எத்தனை நாட்கள் தேவைப்படும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் கடினம் என உணர்கின்ற பாடங்களுக்கு கூடுதல் நாட்களைப் படிப்பதற்காக ஒதுக்கிக் கொள்ளுங்கள்.
4. உறக்கத்திற்கும் நேரம் ஒதுக்குங்கள்.
நல்ல உறக்கம், நல்ல மதிப்பெண்களைப் பெற உதவும்
சில மாணவர்கள் தேர்விற்கு முந்தைய நாள் இரவு முழுவதும் தூங்காமல் படித்துக் கொண்டே இருப்பார்கள். இன்னும் சிலர் தேர்வறைக்குச் செல்வதற்கு பத்து நிமிடங்களே உள்ள நிலையில்கூட படித்துக் கொண்டிருப்பார்கள். ஆண்டு முழுவதும் படிக்காததை இந்தக் கடைசி பத்து நிமிடங்களில் படித்து விடமுடியாது என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தேர்விற்கு முந்தைய நாள் இரவு குறைந்தபட்சம் ஆறு மணிநேரமாவது உறங்க வேண்டும். இந்த 6 மணிநேர உறக்கம் உங்களைத் தேர்வறையில் சோர்வு இல்லாமல் சிறப்பாக தேர்வு எழுத உதவும். அதுமட்டுமின்றி, சரியான உறக்கம் இல்லை என்றாலும், சிந்திக்கும் திறன் குறைந்து, படித்ததும் மறந்து போகும். எனவே படித்ததை மனத்தில் இருத்தி யோசிக்கவும், நிம்மதியாக உறங்குவதற்கும் நேரம் ஒதுக்குங்கள். மறுநாள் மூளை பிரஷ் ஆகி, அனைத்தும் சரியாக நடக்கும்.
5. குறுக்கு வழியில் முயற்சிக்க வேண்டாம்
தேர்விற்கு முன்தினம் சமூக வலைதளங்கள் மூலமாக தேர்வு வினாத்தாள் கசிந்துவிட்டது போன்ற வதந்திகள் பரப்பப்படும். இந்த வினாக்கள்தான் கட்டாயம் தேர்வில் கேட்கப்படும் என்பன போன்ற தேவையற்ற வதந்திகளை நம்பி மாணவர்கள் ஏமாற வேண்டாம். குறுக்கு வழியில் சென்று எப்போதும் வெற்றியைப் பெற முடியாது. எனவே, முழு நம்பிக்கையோடு பாடங்கள் முழுவதையும் படித்துவிட்டுத் தேர்வினை எதிர்கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம்.
6. தேர்வு நாள்
தேர்வு நாளன்று மிகச் சீக்கிரமாக எழுந்து கொள்ளுங்கள். அன்றாடச் செயல்களைக் குறிப்பிட்டநேரத்திற்குள் முடித்துவிட்டு, கட்டாயம் காலை உணவைச் சாப்பிட்டுவிட்டு வீட்டில் இருந்து புறப்படுங்கள். வீட்டில் இருந்து புறப்படுவதற்கு முன்பு தேர்வு நுழைவுச்சீட்டு (Hall ticket), தேர்வு எழுதத் தேவையான பேனா, பென்சில், ரப்பர், அளவுகோல் (scale) போன்றவற்றை சரிபார்த்துக் கொண்டு தேர்விற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னரே தேர்வு மையத்தை அடையுமாறு, நேரத்தை கணக்கிட்டு, வீட்டில் இருந்து புறப்பட்டுச் செல்லுங்கள்.
7. தேர்வு எழுதுவதற்கு முன்பு
தேர்வறைக்குச் செல்வதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாகவே புத்தகங்களை மூடி வைத்துவிட்டு, அமைதியாக உட்கார்ந்து 5 நிமிடம் எதைப் பற்றியும் சிந்திக்காமல் கண்களை மூடி யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி போன்ற ஏதேனும் ஒன்றைச் செய்துவிட்டு அமைதியான மனநிலையில் தேர்வெழுதச் செல்லுங்கள்.
8. நேர மேலாண்மை
தேர்வு அறையில் வினாத்தாளை வாங்கியவுடன் விடைகளை எழுதத் தொடங்காமல் வினாத்தாளை ஒரு முறைக்கு இருமுறை வினாக்களை முழுவதுமாக படித்துப் பார்க்க வேண்டும். பின்னர் முதலில் நன்கு பதில் தெரிந்த கேள்விகளுக்குப் பதிலளியுங்கள். மேலும் ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு 30 நிமிடங்கள், இரண்டு மதிப்பெண் வினாக்களுக்கு 40 நிமிடங்கள் என மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு விடைகளை எழுத நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள். இந்தச் செயல்பாடு நீங்கள் சரியான நேரத்தில் சரியாக தேர்வினை முடிக்க உதவும். நன்கு தெரிந்த பதில் என்பதால் 2 மதிப்பெண் கேள்விக்கு 10 மதிப்பெண் அளவிற்கு பதில் எழுதாதீர்கள். அந்த கேள்விக்கு எவ்வளவு எழுதினாலும், 2 மதிப்பெண் மட்டுமே வழங்கப்படும். அத்துடன் நேரமும் வீணாகும். எனவே, மதிப்பெண்ணுக்கு ஏற்ப விடைகளை நீட்டியோ, சுருக்கியோ எழுதுங்கள். இது கால விரையத்தைத் தடுக்கும்.
9. வினாத்தாள் பற்றிய கலந்துரையாடலைத் தவிர்த்தல்
ஒரு தேர்வு முடிந்ததும் அந்தத் தேர்வின் வினாக்களுக்கான விடைகளை நண்பர்களுடன் கலந்துரையாடல் செய்வது மாணவர்கள் மத்தியில் இயல்பாக நிகழக்கூடிய ஒன்று. ஆனால், முதல் தேர்வை நீங்கள் சரியாக எழுதவில்லை என்ற எதிர்மறை எண்ணத்துடன் அடுத்த தேர்விற்கு படிக்கும்போது முந்தைய தேர்வைப் பற்றிய எண்ணங்கள் மனதில் வந்துபோகும். இதனால் அடுத்த தேர்வுக்கு சரியாக படிக்கவோ, தேர்வை சரியாக எழுதவோ முடியாத நிலை ஏற்படும். எனவே முடிந்தவை முடிந்தவையாக இருக்கட்டும். வினாத்தாள் பற்றி கலந்துரையாடல் செய்வதை தவிர்த்துவிட்டு, அடுத்த முயற்சியை சரியாக செய்யுங்கள்.
10. காப்பி அடிப்பதை தவிர்த்து விடுங்கள்
நீங்கள் படித்தது, உங்களுக்கு நினைவில் இருப்பதை மட்டுமே எழுதுங்கள். அடுத்தவர்களை பார்த்து எழுதுவதோ பிட் அடிப்பதையோ செய்யாதீர்கள். அப்படி காப்பி அடித்து மாட்டிக் கொண்டால், அடுத்து தேர்வு எழுதுவது சிக்கலாகி, வாழ்க்கையே திசை மாறிவிடலாம். எனவே, நன்றாக தெரிந்ததை தெளிவாகவும், அழகாகவும், திருத்தமாகவும் எழுதுங்கள். எதுவுமே தெரியவில்லை என்றாலும், உங்களுக்கு நன்றாக தெரிந்ததை எழுதி வையுங்கள். நீங்கள் எழுதும் ஒவ்வொரு தாளுக்கும் மதிப்பெண் வழங்கப்படும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
இந்த தேர்வு உங்கள் எதிர்காலத்தையும், வாழ்க்கையையும் மாற்றியமைக்கும் திறன் கொண்டது. எனவே நீங்கள் என்னவாக வேண்டும் என்பதை மனதில் இருத்தி, அதற்காக உழையுங்கள். உங்கள் கனவு, லட்சியத்தை அடைய, மாணவ, மாணவியருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறது மாலை முரசு தொலைக்காட்சி.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.