இந்தியாவின் உயரிய குடிமைப் பணிகளுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுகளின் இறுதி முடிவுகள் ஏப்ரல் 22, 2024 அன்று வெளியிடப்பட்டன. இந்தத் தேர்வில் நாடு முழுவதும் 1,009 பேர் வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக, தமிழ்நாடு அரசின் "நான் முதல்வன்" திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற 50 மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இது தமிழ்நாட்டின் கல்வி வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
நான் முதல்வன் திட்டம்:
தமிழ்நாடு அரசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டம், மாநிலத்தின் இளைஞர்களுக்கு கல்வி, திறன் மேம்பாடு, மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை உருவாக்குவதற்கு ஒரு முன்னோடி முயற்சியாக அமைந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், இலவச பயிற்சி வகுப்புகள், உயர்கல்வி வழிகாட்டுதல், வேலை வாய்ப்புத் திறன் தேர்வுகள், மத்திய மற்றும் மாநில அரசு வேலைகளுக்கான நுழைவுத் தேர்வு பயிற்சிகள் ஆகியவை வழங்கப்படுகின்றன. குறிப்பாக, யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு போன்ற உயர்மட்ட போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் படுத்துவதற்கு முழு நேர சிறப்பு பயிற்சி முகாம்கள், உதவித்தொகை, நேர்முகத் தேர்வுக்கான பயணக் கட்டணம், மற்றும் தங்கி படிக்கும் வசதிகள் உள்ளிட்டவை அரசால் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
இந்தத் திட்டம் மூலம் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக, கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இத்திட்டம் ஒரு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. இவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை அடைவதற்கு தேவையான வழிகாட்டுதலையும், ஆதரவையும் இத்திட்டம் திறம்பட வழங்கி வருகிறது.
2024 யுபிஎஸ்சி தேர்வில் நான் முதல்வன் திட்டத்தின் பங்களிப்பு:
2024 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வுக்கு, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு முழு நேரப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்ற 134 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது. இறுதி முடிவுகள் வெளியானதில், இவர்களில் 50 பேர் தேர்ச்சி பெற்று, தமிழ்நாட்டின் பெருமையை உயர்த்தியுள்ளனர். குறிப்பாக, இந்த 50 பேரில் 18 பேர் நான் முதல்வன் திட்டத்தின் முழு நேர உறைவிடப் பயிற்சி முகாமில் பங்கேற்றவர்கள் ஆவர். இது, இத்திட்டத்தின் தரமான பயிற்சி மற்றும் மாணவர்களின் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் வெற்றியை எடுத்துக்காட்டுகிறது.
தமிழ்நாட்டின் பெருமை: சிவச்சந்திரன் மற்றும் மோனிகா:
இந்தத் தேர்வில், தமிழ்நாட்டிலேயே முதலிடம் பிடித்த சிவச்சந்திரன், "நான் முதல்வன்" திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அகில இந்திய அளவில் 23-வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார். இதேபோல், மோனிகா என்ற மாணவி அகில இந்திய அளவில் 39-வது இடத்தைப் பெற்றுள்ளார். இந்தச் சாதனை, "நான் முதல்வன்" திட்டத்தின் சிறப்பான பயிற்சியையும், மாணவர்களின் கடின உழைப்பையும் வெளிப்படுத்துகிறது.
இந்த வெற்றி குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், எக்ஸ் தளத்தில் பதிவு செய்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:
“எது மகிழ்ச்சி? நான் மட்டும் முதல்வன் அல்ல; தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் முதல்வனாக, என் பிறந்த நாளில் தொடங்கப்பட்ட #நான்_முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் #UPSC தேர்வில் தமிழ்நாட்டுத் தரவரிசையில் முதல்வனாகிய இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது! பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் இந்தத் திட்டம், வருங்காலங்களில் இலட்சக்கணக்கானோர் வாழ்வில் ஒளியேற்றும் என்ற நம்பிக்கை என் மகிழ்ச்சியாக உள்ளது!”
முதலமைச்சரின் இந்தப் பதிவு, நான் முதல்வன் திட்டத்தின் மீதான அவரது நம்பிக்கையும், இளைஞர்களின் எதிர்காலத்தை மேம்படுத்துவதற்கு இத்திட்டம் எவ்வாறு ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என்பதையும் எடுத்துரைக்கிறது.
பொதுமக்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் வருங்காலத்தில் ஐஏஎஸ் கனவுடன் பயிற்சி பெறுபவர்கள் என பல தரப்பினரும் இந்தச் சாதனையை பாராட்டி வருகின்றனர். "நான் முதல்வன்" திட்டம், தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தத் திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டில் இளைஞர்கள் மேலும் பல சாதனைகளை படைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"நான் முதல்வன்" திட்டம், இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் ஒரு முக்கிய தளமாக விளங்குகிறது. இத்திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டில் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்களில் பயனடைந்து வருகின்றனர். எதிர்காலத்தில், மேலும் பல இளைஞர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்து, நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்