இந்தியாவில் செயல்படும் 32 போலி பல்கலைக்கழகங்கள்.. பட்டியலை வெளியிட்டது UGC!

ஹரியானா, ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு நிறுவனம் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது...
இந்தியாவில் செயல்படும் 32 போலி பல்கலைக்கழகங்கள்.. பட்டியலை வெளியிட்டது UGC!
Published on
Updated on
2 min read

இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பல்கலைக்கழக மானியக் குழு (UGC), நாடு முழுவதும் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வரும் 32 போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்டு மாணவர்களுக்குப் பெரும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள கல்வி நிறுவனங்கள் வழங்கும் பட்டங்கள் உயர்கல்விக்கோ அல்லது வேலைவாய்ப்புக்கோ தகுதியற்றவை என்றும், அவை சட்டப்பூர்வமாகச் செல்லாது என்றும் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவின் தலைநகரான டெல்லியில் மட்டும் அதிகபட்சமாக 12 போலி பல்கலைக்கழகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உயர்கல்வியில் சேருவதற்கு முன்னால், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் முறையான அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு வலியுறுத்தியுள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழுச் சட்டம் (UGC Act) பிரிவு 2(f) மற்றும் 3 ஆகியவற்றின் படி, மத்திய அரசோ அல்லது மாநில அரசோ அங்கீகரிக்காத எந்தவொரு நிறுவனமும் 'பல்கலைக்கழகம்' என்ற பெயரைப் பயன்படுத்தவோ அல்லது பட்டங்களை வழங்கவோ அதிகாரமில்லை. இந்த 32 நிறுவனங்களும் அத்தகைய விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டு வருவதால், அங்கிருந்து பெறப்படும் சான்றிதழ்கள் வெறும் காகிதங்களாகவே கருதப்படும். டெல்லிக்கு அடுத்தபடியாக உத்தரப் பிரதேசத்தில் 4 கல்வி நிறுவனங்களும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா 2 நிறுவனங்களும் போலியானவை என அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் அருணாச்சல பிரதேசம், ஹரியானா, ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு நிறுவனம் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் குண்டூரில் உள்ள 'கிறிஸ்ட் நியூ டெஸ்டமென்ட் டீம்ட் யூனிவர்சிட்டி' மற்றும் விசாகப்பட்டினத்தில் உள்ள 'பைபிள் ஓபன் யூனிவர்சிட்டி ஆஃப் இந்தியா' ஆகியவையும், புதுச்சேரியில் உள்ள 'உஷா லட்சுமணன் கல்வியியல் கல்லூரி' மற்றும் 'ஸ்ரீ போதி அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன்' ஆகியவையும் போலிப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. கேரளாவில் கோழிக்கோட்டில் உள்ள 'இன்டர்நேஷனல் இஸ்லாமிக் யூனிவர்சிட்டி ஆஃப் ப்ரோபெடிக் மெடிசின்' மற்றும் 'செயின்ட் ஜான்ஸ் யூனிவர்சிட்டி' ஆகியவை அங்கீகாரம் அற்றவை என அறிவிக்கப்பட்டுள்ளன. கர்நாடகாவின் தும்கூரில் உள்ள 'சர்வ பாரதிய சிக்ஷா பீத்' மற்றும் பெங்களூருவில் உள்ள 'குளோபல் ஹ்யூமன் பீஸ் யூனிவர்சிட்டி' ஆகியவையும் இந்தப் பட்டியலில் உள்ளன.

டெல்லியில் உள்ள முக்கியமான போலி நிறுவனங்களில் 'வேர்ல்ட் பீஸ் ஆஃப் யுனைடெட் நேஷன்ஸ் யூனிவர்சிட்டி', 'கமர்ஷியல் யூனிவர்சிட்டி லிமிடெட்', 'யுனைடெட் நேஷன்ஸ் யூனிவர்சிட்டி' மற்றும் 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங்' போன்றவை அடங்கும். உத்தரப் பிரதேசத்தில் பிரயாக்ராஜில் உள்ள 'காந்தி ஹிந்தி வித்யாபீத்', அலிகாரில் உள்ள 'நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பல்கலைக்கழகம்' மற்றும் லக்னோவில் உள்ள 'பாரதிய சிக்ஷா பரிஷத்' ஆகியவை செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்காளத்தில் கொல்கத்தாவைச் சேர்ந்த 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆல்டர்நேட்டிவ் மெடிசின்' மற்றும் அதன் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவையும் போலியானவை என்று உறுதி செய்யப்பட்டுள்ளன.

கல்வி நிறுவனங்களின் விளம்பரங்களை மட்டுமே நம்பி மாணவர்கள் தங்களின் பணத்தையும் காலத்தையும் வீணாக்கக் கூடாது என்று கல்வித் துறை அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். சேர விரும்பும் பல்கலைக்கழகம் UGC இணையதளத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இருக்கிறதா என்பதைச் சரிபார்ப்பது அவசியமாகும். போலியான பட்டங்கள் மூலம் அரசுப் பணியில் சேர முயல்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த அதிரடி அறிவிப்பு, தங்களின் வாழ்வாதாரத்திற்காகக் கடினமாக உழைக்கும் மாணவர்களையும் பெற்றோர்களையும் விழிப்புணர்வுடன் இருக்கச் செய்யும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com