

ஒவ்வொரு படம் வெளியாகும்போதும், அந்த படத்தின் புரமோஷனுக்காக படத்தின் வெளியீட்டு விழாக்களில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவது வழக்கம். சில நேரங்களில் அந்த பத்திரிகையாளர் சந்திப்பு ஆரோக்கியமாக நடக்கும் அதே நேரம் சில சந்திப்புகள் சங்கடத்திலும் முடிந்துவிடும்.
அபின் ஹரிஹரன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆதித்யா மாதவன் மற்றும் '96' பட நடிகை கௌரி கிஷன் நடிப்பில் ’அதர்ஸ்’ (others) திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் இன்றைக்கு ரிலீஸ் ஆகியுள்ளது. இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
ஆனால் இதற்கு முன்னதாகவே அதர்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, படத்தில் நடிகையை தூக்கியுள்ளீர்களே? நடிகையின் எடை என்ன? என கதாநாயகனிடம் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய கௌரி எனது எடை பற்றி முட்டாள்தனமான கேள்விகள் எழுப்பப்படுகிறது. இதுபோன்ற கேள்விகள் முறையானது அல்ல என தன்னைப்பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், கௌரிக்கும் ‘அந்த’ நிருபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால் கௌரி மிக மிக நேர்த்தியுடன் இந்த சிக்கலை கையாண்டார் என்றே சொல்லவேண்டும். அவர் பேசுகையில், “அன்னைக்கு ஹீரோ கிட்ட கேட்டிங்க, அவங்கள தூக்கி இருக்கீங்க, அவங்க weight என்னனு…? அதுவே முதல் body shaming… ஒரு படத்துக்கு யார தேர்வு செய்யனுங்கிறது இயக்குநரோட முடிவு..அத கேள்வி கேக்க நீங்க யாருங்க? சார் நா இப்போ size 0 -ல இருக்கணும்னு நீங்க எப்படி சொல்ல முடியும்? இங்க இவ்ளோ ஆம்பளைங்க இருக்கீங்க…”I am the only Women here..” எல்லாரும் என்ன வய மூட சொல்றீங்கள்ல, அத யாராவது அவர்கிட்ட சொல்லுங்க. ஒரு ஹீரோகிட்ட போய் உங்க weight என்னனு கேட்டுருவீங்களா? என் எடைக்கும் இந்த படத்துக்கும் என்ன சம்பந்தம், ஏன் என் கதாபாத்திரம் பத்தி கேக்கவே இல்லை..படத்தை பத்தி ஏன் கேக்கல..? சொல்லங்க சார்..” என அவர் பேசியிருந்தார்.
மேலும் அவர் பேசும்போது அந்த நிருபர் குறுக்கிட்டு, ‘உங்களுக்கு தமிழ் தெரியல’ ‘ நான் எவ்வளவு weight -னு தான் கேட்டேன்.. குண்டு -னு சொல்லல’ என சத்தம் போட்டு பேசியிருப்பார் .
இதற்கிடையில் “உங்க weight என்னனு கேக்குறது ஒரு முட்டாள்தனமான கேள்வி” என கௌரி சொன்னதும், அந்த நிருபர் ஆத்திரத்தில் மேலும் சத்தம் போட துவங்கினார். சிறிது நேரம் அப்பகுதியில் சலசலப்பு நிலவியது.
கௌரிக்கு பெருகும் ஆதரவு!
இந்நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைராலகி வருகிறது, மேலும் கௌரிக்கு திரைபிரபலங்கள் துவங்கி பொதுமக்கள் வரையில் அனைவரும் ஆதரவு தெரிவித்து வந்தனர். சில படங்களில் நடிகர்கள் அபரிமிதமான அளவுக்கு உடல் எடையை பெருக்கி அதன் பிறகு நடித்தாலும் ‘எவ்வளவு இயல்பாக இருக்கிறார்’ என சொல்லும் சமூகம் பெண்ணுக்கு மட்டும் வரையறை போடுவது என்ன நியாயம், இதுதான் ஊடக அறமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
வலுத்த கண்டனங்கள்!
யூட்டியுபரின் இந்த செயலுக்கு, சென்னை பத்திரிகையாளர் மன்றம், முக்கியமான ஊடகவியலாளர்கள், திரைப்பட இயக்குனர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த சூழலில் தான், அந்த யூடியூபர் சம்பவத்திற்கு மன்னிப்பு கோரும் விதமாக வீடியோ வெளியிட்டார், அதில் “விளையாட்டாக கேட்ட கேள்விதான்…” என பேசியுள்ளார்.
ஆனால் அதற்கு பதில் அளித்த கௌரி, , "பொறுப்புணர்வில்லாத மன்னிப்பு என்பது மன்னிப்பே கிடையாது . முக்கியமாக, "நான் கேள்வியை தவறாக புரிந்துகொண்டேன் என சொல்லியிருக்கிறார்; மேலும் அது ஜாலியான கேள்விதான், என பேசியிருக்கிறார். இது செய்த தவறுக்கு பொறுப்பேற்காது, தட்டிக்கழிக்கக்கூடிய செயல்தான். இது மிகப்பெரிய பிரச்னைதான். நான் தெளிவாகச் சொல்கிறேன். மேடைத்தனத்துடன் கூடிய போலி வார்த்தைகளால் வெளிப்படும் மன்னிப்பை நான் ஏற்கமாட்டேன். சரியாக நடந்து கொள்ளுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.